திருப்பூர் சிவன்மலை கோவிலில் ஆச்சரியம்.. ஆண்டவன் உத்தரவு பெட்டியில் என்னனு பாருங்க.. நல்லதா? கெட்டதா
திருப்பூர்: சமீப காலமாக சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தற்போது அதுகுறித்த மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இது பக்தர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில். இங்கு மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாக விளங்குகிறது.

கோயிலின் தனிச்சிறப்புகள்
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கி தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்கு சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன், இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.. அதனால்தான் இந்த கோயிலில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறாராம்.
இந்த சிவன்மலை கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், இன்றுவரை வியப்பை தந்து வருவது பிரசித்தி பெற்ற ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்... இதில் வைத்து வணங்கப்படும் பொருட்கள் நாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதுபோல் கடந்த காலங்களிலும் பல சம்பவங்கள் அப்படியே நடந்திருக்கின்றன.
இன்பம் - துன்பம்
அந்தவகையில் நாட்டில் ஏற்படும் இன்பங்களையும், துன்பங்களையும் முன்கூட்டியே உணர்த்தி கொண்டிருக்கிறது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.. சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைக்கும் பழக்கம் அன்றைய காலத்திலிருந்தே நடைமுறையிலும் இருந்து வருகிறது.
அதாவது, சிவன்மலை முருகன், பக்தரின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சொல்வார்.. உடனே அந்த பக்தர், அந்த பொருள் குறித்து கோவில் அர்ச்சகர்களிடம் வந்து தெரிவித்து, அந்த பொருளையும் கையோடு கொண்டு தந்து, அதனை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா? என்றும் சுவாமியிடம் அனுமதி கேட்பார்.
வெள்ளை பூ - சிவப்பு பூ
அர்ச்சகர்களும் இதனை பூ போட்டு கேட்பார்கள்.. வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து இதற்கான உத்தரவு கேட்பார்கள்.. இதில் வெள்ளை பூ விழுந்துவிட்டால் அனுமதி கிடைத்தது என்று அர்த்தம். அதன்படி, ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்பட்டு, தற்போது பக்தர் கொண்டுவந்துள்ள பொருள் மாற்றி வைக்கப்படும்.
அந்தவகையில், இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, ருத்ராட்சம், 2 இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இப்படி வைத்து பூஜை செய்யப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.. இதுவரை அப்படித்தான் ஏற்படுத்தி வந்திருக்கிறது.
கற்பூரம் பிரம்பு பூஜை
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார்கள் சொல்லும்போது, "சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று முதல் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதன் தாக்கம் போகப்போகத் தான் தெரியும்" என்றனர்.












Click it and Unblock the Notifications