உயிர் பலி வாங்கும் திருப்பூர் நெடுஞ்சாலை.. அடுத்தடுத்து விபத்துகளால் நடுங்கும் மக்கள்
திருப்பூர்: திருப்பூர் நெடுஞ்சாலையில் தொடரும் கோர விபத்துகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு அதிகாலையில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் உயிரிழந்தனர். 2024 ஆம் ஆண்டு கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி லாரியின் பின்னால் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், திருப்பூர் - ஈரோடு செல்லும் வழியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் குறைந்தது 19 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தின் மீது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

டைல்ஸ் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மையத் தடுப்பை தாண்டி எதிரே வந்த பேருந்தின் மீது லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள், 14 ஆண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கேரள காவல் துறையினரின் பாதுகாப்போடு சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, கடந்த 2024 டிசம்பர் 9 ஆம் தேதி அவிநாசியில் லாரியின் பின்னால் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து சொகுசுப் பேருந்து ஒன்று டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அவிநாசி புறவழிச் சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சொகுசுப் பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு அவிநாசி அரசு மருத்துவமனை, திருப்பூர், கோவை உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். சேலம் கொச்சின் செல்லும் ஆறு வழிச்சாலையில் இந்த விபத்து நடைபெற்றது.
இந்நிலையில், இன்று திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 9.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்துள்ளது.
அந்த லாரியை தனியார் பேருந்து முந்துவதற்கு முயன்ற போது நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீஸார் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications