பெற்றோருக்கு தெரியாமல் காதலனை நம்பி ஏமாறும் 'டீன் ஏஜ்' பெண்கள்.. இந்த திருப்பூர் சம்பவம் பெரிய பாடம்
திருப்பூர்: திருப்பூரில் 16 வயது சிறுமியிடம் அடிக்கடி அத்துமீறிய இளைஞர் மற்றும் அதை வீடியோ எடுத்து மிரட்டிய பனியன் தொழிலாளி ஆகிய இரண்டு பேரை திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். 16 வயது மாணவி இந்த இளைஞர்களிடம் சிக்கி சீரழிந்தது எப்படி. காதல் என்ற பெயரில் ஏமாறும் சிறுமிகளுக்கு இந்த செய்தி நிச்சயம் பாடமாகும். பருவ வயதில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இன்றைய 2கே கிட்ஸ் குழந்தைகளில் சிலர், காதல் என்ற பெயரில் இன்ஸ்டகிராமில் முகம் தெரியாதவர்களுடன் பழகுவது , தான் வேலை செய்யும் நிறுவனத்தில், தன் பின்னால் சுற்றும் இளைஞர்களின் காதல் என்ற பெயரில் வலையில் விழுவது போன்ற தவறுகளால் ஏமாந்துவிடுகிறார்கள்.

இளம் வயதிலேயே சரியான வாழ்க்கை புரிதல் இல்லாத காலக்கட்டத்திலேயே.. போதிய சம்பாத்தியம் இல்லாத, காமம் தான் காதல் என்று சுற்றும் அரைவேக்காட்டு இளைஞர்களை திருமணம் செய்து வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். சரியான வேலையில் இல்லாவிட்டாலும், படிக்காவிட்டாலும், ரவுடித்தனம் செய்து கொண்டு, குடித்துவிட்டு கும்மாளமிடும் இளைஞர்களை சினிமா பாணியில் காதலித்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள். கையில் ஒரு குழந்தை வந்த பின்னர், எதார்த்தத்தை உணரும் போது, ஒன்றுமே செய்ய முடியாமல் தடுமாறுகிறார்கள். சிலர் காமகொடூரர்களின் பாலியல் இச்சைக்கு இரையாகி விடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் திருப்பூரில் நடந்துள்ளது.
திருப்பூர் வாரணாசி பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயதாகும் மணிகண்டன் தையல் தொழிலாளியாவார். இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார் மணிகண்டன். மணிகண்டன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். பனியன் நிறுவன வளாகத்தில் அடிக்கடி தனிமையிலும் சந்தித்துள்ளார். அப்போது சிறுமியிடம் மணிகண்டன் அத்துமீறி வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருப்பதை அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாண்டியன் நகரை சேர்ந்த சிவராஜ் (30) அறிந்து கொண்டார்.
மணிகண்டனும், அந்த சிறுமியும் தனிமையில் இருப்பதை வீடியோ எடுக்க சிவராஜ் திட்டமிட்டார். இதற்காக சிறிய கண்காணிப்பு கேமராவை ஆன்லைன் மூலமாக வாங்கி, அதை மணிகண்டனும், சிறுமியும் வழக்கமாக சந்தித்து பேசும் அறையில் பொருத்தியிருக்கிறார். அதன்பிறகு 2 பேரும் தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து சிவராஜ், தனது செல்போனில் பதிவு செய்து சிறுமியிடம் காட்டி மிரட்டியுள்ளார். மேலும் தன்னிடமும் தனிமையில் இருக்குமாறு சிறுமியிடம் வற்புறுத்தினாராம்
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் தைரியமாக உண்மையை கூறினார். பின்னர் சிறுமியின் பெற்றோர் இது பற்றி வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் ஏற்கனவே திருமணமானதை மறைத்து, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மணிகண்டனை பிடித்தனர். மேலும் ரகசியமாக படம் பிடித்து சிறுமியை மிரட்டிய சிவராஜையும் போலீசார் பிடித்தனர். ரகசியமாக படம் பிடிக்க பயன்படுத்திய சிறிய கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தார்கள், இதைத்தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் மணிகண்டன், சிவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications