ஆன்லைன் விளையாட்டு.. கடத்தல், திருமணம், பாலியல் தொல்லை.. திருப்பூர் சிறுமிக்கு நேர்ந்தது என்ன?
திருப்பூர்: ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டதில் 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. 25 வயதான இவர் அப்பகுதியில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இவர் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கம். அப்படி ஒருநாள் ஆன்லைனில் விளையாடும்போது திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தட்சிணாமூர்த்திக்கு அறிமுகமாகியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் கேமில் தொடங்கிய இவர்களது பழக்கம் நாளடைவில் இருவரும் செல்போனில் பேசிக் கொள்ளும் அளவுக்கு வந்துள்ளது. பின்னர், இருவரும் செல்போன் மூலம் தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சிறுமியை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்துக்கு சிறுமி 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வந்துள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டையில் இருந்து தட்சிணாமூர்த்தியும் சிறுமியை பார்ப்பதற்காக திருப்பூருக்கு கிளம்பி வந்துள்ளார். பின்னர், இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். தட்சிணாமூர்த்தி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குவைத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, தட்சிணாமூர்த்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதற்கிடையே சிறுமி காணாமல் போனது குறித்து சிறுமியின் பெற்றோர் குண்டடம் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், தட்சிணாமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டையில் இருந்து சிறுமியை போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 29 ம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், திருமணம் செய்வதற்காக சிறுமியை ஏமாற்றி சொந்த ஊருக்கு கடத்திச் சென்ற குற்றத்துக்காக 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
குழந்தைத் திருமணம் செய்த குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இதனை ஏக காலத்தில் தட்சிணாமூர்த்தி அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, தட்சிணாமூர்த்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications