திருப்பூரில் வாகன சோதனை பெயரில் வசூல் வேட்டை.. அதுவும் எப்படி தெரியுமா? மேலிடத்திற்கு போன மேட்டர்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தனியார் வாகனத்தில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம் போல் லைட் மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி வாகன சோதனையில் ஈடுபட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீசார் மீது புகார் எழுந்தது. அந்த போலீசார் யார் என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பைபாஸ் சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு வாகனத்தை பயன்படுத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதனுக்கு இது தொடர்பாக புகார் தெரிவித்தார்கள்.

இதையடுத்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்குமாறு அவினாசி காவல் அதிகாரிகளுக்கு திருப்பூர் மாவட்ட எஸ்பி சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்படி தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின்விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி அவினாசி காவல் நிலையத்திற்கு உரிய நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஊத்துக்குளியில் ஏற்பட்ட விபத்தில் சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த வாகனம் சரி செய்வதற்காக அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் விட்டிருக்கிறார்கள்.
இதனால் ரோந்து வாகனம் இல்லாததால் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 காவலர்கள் 2 பிரிவுகளாக இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்கள். ஒருகட்டத்தில் இருசக்கர வாகனத்தில் அவர்கள் ரோந்து செல்ல வில்லை. அதற்கு பதிலாக அந்த 6 பேர் கொண்ட குழுவினர், ஒரு பெண் போலீசின் உறவினருக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பொதுமக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க ரோந்துக்கு பயன்படுத்திய தனியார் வாகனத்தில் போலீஸ் வாகனம் போல் லைட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி தீவிர வசூலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு சென்ற நிலையில், வசூல் வேட்டைக்கு பயன்படுத்திய தனியார் வாகனத்தை மறைத்து வைத்துவிட்டார்களாம். விசாரணையின் முடிவில் எந்தெந்த போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என்று சொல்கிறார்கள்.இதனால் வசூல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications