திருப்பூர் அருகே தலை துண்டிக்கப்பட்ட எஸ்ஐ, என்கவுண்ட்டர் .. 2 உயிர் போக காரணமான பிரச்சனை என்ன?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இங்கு தங்கி வேலை செய்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரிடையே பிரச்சனை எழுந்தது. இதனை விசாரிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இதனை செய்த மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டார். இப்படி 2 உயிர்கள் பலியாவதற்கு காரணமான குடும்ப பிரச்சனை என்ன? என்று தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு உடுமலையை அடுத்த சிக்கனூத்து கிராமத்தில்சொந்தமான தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 65 வயதாகும் மூர்த்தி, 30 வயதாகும் அவருடைய மகன் மணிகண்டன் ஆகியோர், குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

100க்கு வந்த கால்
தோட்டத்தில் வேலை செய்து வரும் மூர்த்தியை பார்க்க 25 வயதாகும் அவரது இரண்டாவது மகன் தங்கப்பாண்டி கடந்த 5-ந்தேதி இரவு தோட்டத்துக்கு வந்தார். அப்போது மூர்த்தியும், அவரது மகன்கள் மணிகண்டன், தங்கப்பாண்டியன் ஆகியோர் மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. மதுபோதையில் அப்பா மற்றும் மகன்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மூர்த்தி மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் உயிரை காப்பாற்றுமாறு மூர்த்தி காவல்துறை அவசர கட்டுப்பாட்டு எண்ணான 100க்கு அழைத்துள்ளார். அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சண்முகவேலுக்கு என்ன நடந்தது
அந்த தகவலின் பேரில் அங்கு விசாரணைக்கு சென்ற குடிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், போலீஸ் என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து அரங்கேறிய இவ்விரு சம்பவங்கள் தமிழகத்தையே ஆடிப்போக வைத்துள்ளது.
சண்டைக்கு காரணம் என்ன
இதற்கிடையே தந்தை, மகன்கள் மோதிக்கொண்டதற்கான காரணம் என்ன.. தங்கப்பாண்டி தோட்டத்துக்கு வந்தது ஏன். மணிகண்டன் மூர்த்தி இடையேஎன்ன தகராறு ஏற்பட்டது என்பது தெரிந்தால் மட்டுமே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் தெரியவரும் என்பதால் அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
கூலிப்படை ஸ்டைல்
அதேநேரம் சப் இன்ஸ்பெக்டரை தலை துண்டித்து கொலை செய்துள்ளார் மணிகண்டன்.. அவருக்கு சண்டை போட்ட மூர்த்தியும் தங்கப்பாண்டியும் உதவியுள்ளார்கள். ஒருவரை தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு வெறி எல்லாம் கூலிப்படையாக இருந்தால் மட்டுமே முடியும். ஏனெனில் அவர்கள் தான், யார் என்றே தெரியாதவர்களை கூட தலை துண்டித்து கொல்லும் அளவிற்கு துணிந்து செயல்படுவார்கள். எனவே அந்த அளவிற்கான சம்பவத்தின் பின்னணி என்ன, தோட்டத்தில் என்ன நடந்தது என்றும் விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை
பொதுவாக இதுபோன்ற தாக்குதல்கள் சம்பவத்தை விசாரிக்க போகும் போலீசார், அவர்களை கைது செய்து அழைத்து வருவார்கள். ஏனெனில் கிட்டத்தட்ட கொலை முயற்சி என்பதால், இதை அப்படித்தான் அணுகுவார்கள். அந்த வகையில் மூன்று பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று உரிய முறையில் விசாரிக்க வேண்டி வரும் என்று சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் எச்சரித்தார் என்று தெரிகிறது.
போலீசுக்கு எதிராக திரும்பியது ஏன்
இந்நிலையில் தந்தை-மகன்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர்கள், காவல் நிலையம் சென்றால், மொத்தமாக சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால், அந்த நேரத்தில் சண்டையை மறந்து தந்தை-மகன்கள் என 3 பேரும் கை கோர்த்து போலீசுக்கு எதிராக திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
தலைமறைவு வாழ்க்கை
தலைமறைவு வாழ்க்கை வந்த அவர்களை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததும், அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் போதையில் போட்ட சண்டை அப்பாவியான சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு எமனாக மாறியுள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த வழக்கில் கைதான மூர்த்தியும், தங்கபாண்டியும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதேபோல் மூர்த்தி, தங்கப்பாண்டி ஆகியோரின் குடும்பத்தினரிடமும், மணிகண்டனின் மனைவிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் சப்-இன்ஸ்பெக்டர் கொலைக்கான காரணம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications