முதுபெரும் ஈழ தலைவர் ஈழவேந்தன் கனடாவில் காலமானார்- தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்!
டொரண்டோ: இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஈழவேந்தன் (91 வயது) கனடாவில் முதுமையால் காலமானார். 2000-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து ஈழவேந்தன், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்.
இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஈழவேந்தன். பிரபாகரன் தலைமையிலான ஆயுதப் போராட்டம், தமிழீழ விடுதலை ஆகியவற்றை முழுமையாக ஆதரித்தவர்.

1990-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எங்கு ஈழ ஆதரவு கூட்டம் நடந்தாலும் கையில் பையுடன் கத்தை கத்தையாக நோட்டீஸ்களை பிடித்தபடி ஈழவேந்தனைப் பார்க்க முடியும். தமிழீழ பிரச்சனையில் அவ்வப்போது ஏற்படும் தாக்கங்கள், நிகழ்வுகள், தமிழ்நாட்டு மக்களுக்கு ஈழப் பிரச்சனையை புரிய வைக்கும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ்களை இடைவிடாமல் கொடுத்துக் கொண்டே இருந்தவர் ஈழ வேந்தன்.

தமிழ்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுடனும் மிக நெருக்கமான நல்லுறவை பேணி வந்தார். 2000-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தங்கி இருந்த ஈழ வேந்தனை மத்திய அரசு வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு இலங்கைக்கு நாடு கடத்தி அனுப்பியது. இது தொடர்பாக அப்போது நெடுமாறன் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் இலங்கையில் நாடாளுமன்ற எம்பியாக இருந்தார். நாடாளுமன்றத்துக்கு தொடர்ந்து செல்லாத நிலையில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. பின்னர் கனடா சென்று அங்கேயே அடைக்கலமாகி ஈழ ஆதரவு செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் வயது முதுமை, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஈழவேந்தன் காலமானார்.

தமிழீழ மூத்த அரசியல் தலைவர் ஈழவேந்தன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications