திருச்சி அருகே அதிர்ச்சி.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.. விடியவிடிய நடக்கும் மீட்பு பணி
Recommended Video
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் நிபுணர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள்.
மொத்த தமிழகமும், இந்த குழந்தை நல்ல முறையில் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறது. #SaveSujith என டுவிட்டரில் தமிழ் நெட்டிசன்கள் தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் இன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆள்துளை கிணறு ஒன்று பயன்பாட்டுக்கு வழிஇன்றி மேலே மூடப்பட்டு இருந்தது. ஆனால் மழை காரணமாக மேலே மூடப்பட்டிருந்த மணல் அகன்றுவிட்ட, கட்டிட தொழிலாளியான ஆரோக்கியதாஸ் மற்றும் தாயார் மேரி தம்பதியின், 2 வயது ஆண் குழந்தையான சுஜித் வின்சென்ட் அந்தப்பக்கமாக சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் சுஜித் இன்று மாலை 5.40 மணியளவில் திடீரென விழுந்துவிட்டார். இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 22 அடி ஆழம் கொண்டதாக அந்த ஆள்துளை கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே ஆக்சிஜனை ட்யூப் மூலம் அனுப்பி அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தீயணைப்புத்துறையினர் எடுத்தனர். சம்பவ இடத்திற்கு மருத்துவ மீட்பு குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றின், பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியைத் தோண்டி அதன் வழியாகவும் குழந்தை எடுப்பதற்கான முயற்சி நடைபெற்றது. ஆனால், அதிர்வு காரணமாக, ஆழ்துளை கிணறுக்குள் மணல் விழுந்ததால், உடனடியாக அந்த பணி நிறுத்தப்பட்டது.
குழந்தை பயப்படாமல் இருப்பதற்காக கிணற்றுக்குள், வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராவை அனுப்பி தீயணைப்புத்துறையினர் சோதித்துப் பார்த்தபோது, உட்கார்ந்த நிலையில் குழந்தை இருப்பது தெரியவந்தது. குழந்தையின் உடலில் அசைவு இருக்கிறது. குழந்தையின் தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் தாயார் மேரி ஆகியோரை வைத்து குழந்தையிடம் ஒலிபெருக்கியில் பேச வைத்தனர் அதிகாரிகள்.

இருள் சூழத் தொடங்கியதால், கூடுதல் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரடியாகச் சென்று மீட்பு குழுவினருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். மாவட்ட போலீஸ் எஸ்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்தடுத்து அங்கே விரைந்து சென்று, மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனிடையே மதுரையில் இருந்து, ரோபோ அறிவியலாளர் மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மீட்பு நிபுணர் டேனியல் ஆகியோரும், ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்று, தாங்கள் வைத்துள்ள கருவிகள் மூலமாக, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் குழந்தை அவரது உறவினர்கள் பேச்சுக்கு பதில் சொல்லியது. இரவு 1.45 மணி நிலவரப்ப்டி, குழந்தை பேச சிரமப்பட்டது. ஆனால், குழந்தையிடம் அசைவு தென்படுவதால் அஞ்ச வேண்டாம் என மருத்துவ குழு தெரிவித்து வருகிறது. விழுந்த இடத்திலிருந்து தற்போது மேலும் கூடுதலாக 6 அடி ஆழம் வரை குழந்தை கீழே சென்றுள்ளதால்தான் மீட்பு பணியில் சிறு தடை ஏற்பட்டது. நல்லவேளையாக, இதற்கும் கீழே குழந்தை செல்ல வாய்ப்பு இல்லை என்கிறார்கள், அதிகாரிகள். எனவே விரைந்து குழந்தையை மீட்க தீவிர பணிகள் நடந்து வருகிறது.

இரவு 10.35 மணிக்கு கிடைத்த தகவல்படி, டேனியல் குழு ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பிய கருவி மூலம், சுஜித்தின் ஒரு கையில் கயிறு மாட்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இன்னொரு கையிலும் இதேபோல கயிறு மாட்டினால், சிறுவனை மெல்ல மெல்ல மேலே தூக்கி கொண்டு வர முடியும் என்பதால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மற்றொரு கையில் கயிற்றை கட்டி மேலே இழுக்க முற்பட்டபோது, அது அவிழ்ந்துவிட்டது. எனவே மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த கையிலும், உறுதியாக கயிறு கட்டும் பணிகளை டேனியல் மற்றும் மணிகண்டன் குழு தொடர்ந்து மேற்கொண்டது. நள்ளிரவு 12.40 மணிக்கு வந்த தகவல்படி, 2 முறை, கயிறு கட்டிய முயற்சி வெற்றியடையவில்லை. எனவே கோவையிலிருந்து சென்ற ஸ்ரீதர் என்பவர் குழு நவீன கருவிகளை கொண்டு குழந்தையை மீட்க முயன்றது. ஆனால், ஈரப்பதம் அதிகரித்ததால், நவீன கருவி குழந்தையை கவ்வி பிடிக்க முடியவில்லை.

எனவே ஒரு கையில் கையிறு கட்டப்பட்டிருக்கும் தைரியத்தில், இரவு 1.40 மணியளவில், ஆழ்துளை கிணறு அருகே, ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி ஆரம்பித்தது. அதன் வழியாக 30 அடி ஆழத்திற்குள் மீட்பு படையினரை அனுப்பி குழந்தையை மீட்பதே திட்டம்.
சுஜித்தை பத்திரமாக மீட்டதும், உடனடியாக முதலுதவி அளிக்க, மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. அமைச்சர்கள் இருவரும் நள்ளிரவு வரை தொடர்ந்து, அங்கேயே இருந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications