'‘ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள்'’.. முதலமைச்சரை சத்தம் போட்டு அழைத்து உதவிகோரிய சிறுமி!
திருச்சி: ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வையுங்கள் என, முதலமைச்சரை சிறுமி ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் சத்தம் போட்டு அழைத்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
இன்று தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரப்படும் கால்வாய்களை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றிரவே சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்துவிட்டார். அவரை விமான நிலையத்தில் வரவேற்க திரளான திமுகவினரும், கோரிக்கை மனுக்களுடன் மக்களும் வந்திருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கு நின்று கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர் ''ஸ்டாலின் அங்கிள்''.. ''ஸ்டாலின் அங்கிள்''.. 'என்னை படிக்க வையுங்கள் என்று சத்தம் போட்டு அழைத்தார். கட்சியினர் கூட்டம் அதிகம் இருந்ததால் அதனை முதலமைச்சர் ஸ்டாலின் கவனிக்கவில்லை.
முதலமைச்சர் தஞ்சை புறப்பட்டு சென்ற பின், ஏற்கனவே சிறுமியின் அழைப்புச் சத்தத்தை கேட்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் நேராக அந்தச் சிறுமியிடம் வந்து என்ன உதவி தேவை எனக் கேட்டார். அப்போது, தனது குடும்பம் வறுமையால் வாடுவதாகவும் இதனால் பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை எனவும் அந்த சிறுமி மாவட்ட ஆட்சியர் பிரதீப்பிடம் தெரிவித்தார்.
தாம் ஏற்கனவே படித்து வரும் பள்ளியில் படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கண்ணீர் விட்டு சிறுமி அழுததை பார்த்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை சத்தம் போட்டு அழைத்து படிக்க உதவி கோரிய சிறுமியின் பெயர் காவ்யா என்பதும் அவரது சொந்த ஊர் மணப்பாறை என்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தை மாரடைப்பால் ஓராண்டுக்கு முன்னர் மறைந்துவிட்டதால் தற்போதும் தாயாருடன் கோவை சிங்காநல்லூரில் வசித்து வருவதாகவும் அங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சிறுமி காவ்யா, முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறார் என்ற தகவலறிந்து விமான நிலையத்திற்கு சென்று இரவு 9.30 மணி வரை காத்திருந்து ஸ்டாலினிடம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications