சூரியூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளை.. வாடிவாசலில் நிகழ்ந்த அந்த சம்பவம்.. என்ன நடந்தது?
திருச்சி: சூரியூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியில் வந்த காளையும், களத்தில் இருந்து திடீரென வாடிவாசலுக்குள் புகுந்த காளையும் நேருக்கு நேர் மோதியதில் திருவளர்சோலையைச் சேர்ந்த காளை உயிரிழந்தது.
மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேடு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் சூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியில் பங்கேற்கும்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். இன்று காலை 8 மணிக்கு சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. இதில் மொத்தமாக 800 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். காலை முதலே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறி பாய்ந்த போது, அதனை அடக்க மாடுபிடி வீரர்களும் பாய்ந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் பங்கேற்று பரிசை வென்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அதற்கேற்ப ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இந்த நிலையில் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவளர்சோலையைச் சேர்ந்த அப்பு என்பவரின் காளை வாடிவாசலில் இருந்து வெளியில் வந்துள்ளது. அந்த நேரத்தில் களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் புகுந்த காளையும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அப்புவின் காளை காயமடைந்த நிலையில், உடனடியாக அந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி காயமடைந்த அந்த காளை சில மணி நேரங்களில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் காளையின் உரிமையாளர் மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 22 வயதான இளைஞரான நவீன் குமார் உயிரிழந்த நிலையில், இன்று காளை உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications