தப்பா நினைச்சுக்கிட்டு.. 10ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவர்கள்... திருச்சியில் ஷாக்
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில், தங்கள் மீது கல்வீசியதாக தவறாக நினைத்து, சக மாணவர்கள் தாக்கியதில், பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் அருகே பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. தோளூர்பட்டியை சேர்ந்த கோபி என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் மௌலீஸ்வரன் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துள்ளனர். அப்போது சகமாணவர்கள் சிறுசிறு கற்களை போட்டு விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் சக மாணவர்கள் சிலர் கற்களை வீசியதாக தவறாக எண்ணி மௌலீஸ்வரை 3 பேர் தாக்கி உள்ளனர்.

உயிரிழப்பு
இதில் படுகாயமடைந்த மாணவன் மௌலீஸ்வரனை, தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஆசிரியர்கள் கொண்டு சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக மாணவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஏற்கனவே மாணவர் இறந்தது தெரியவந்தது.

பேச்சுவார்த்தை
மகன் உயிரிழந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு, திருச்சி நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த முசிறி டிஎஸ்பி யாஷ்மின் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார்.

தொட்டியம் பகுதி
அத்துடன் அந்த 3 மாணவர்களையும் தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முசிறி தொட்டியம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பாராதது
இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஷ்மின் கூறுகையில், மாணவர்களுக்கு இடையே முன்விரோதம் இல்லை. எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 மாணவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications