திரையுலகில் முடிசூடா மன்னர் விஜய்... திருச்சி ரசிகர் மன்றத்தினர் பெருமிதம்
திருச்சி: தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னன் விஜய் என்றும், அவர் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கின்றனர் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கதினர்.
மேலும், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் விஜய் நிரப்ப வேண்டும் என அவரது ரசிகர் மன்றத்தினர் அன்பு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தனது நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கான சமிஞ்கையை விஜய் வெளியிடுவாரா என்பது அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

நற்பணிகள்
தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நற்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. விஜயின் ரசிகர்கள் அவர்களது தலைவனை எப்படியாவது அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதில் மிக கண்ணும் கருத்துமாக உள்ளனர். அதன் எதிரொலியாக விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என இப்போதே மாவட்டம் தோறும் தீர்மானங்கள் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருச்சியில் இன்று நடைபெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயால் மட்டுமே தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப முடியும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

முதல் இடத்தில்
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் தான் முதல் இடத்தில் இருப்பதாகவும், நடிப்பில் முடிசூடா மன்னனாக திகழ்வதாகவும் விஜய் மக்கள் மன்றத்தினர் திருச்சியில் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும், விஜய் படங்களுக்கான வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் தங்களின் நற்பணிகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் இனி வரும் காலங்களில் செயல்பட வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பதில் இல்லை
நடிகர் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக நடிகர் விஜயை தான் தமிழக அரசியலுடன் ஒப்பிட்டு யூகங்கள் அடிப்படையிலான செய்திகள் அவ்வப்போது வெளியாகும். கடந்த 7 வருடத்திற்கு முன்பே நடிகர் விஜய் காங்கிரஸில் சேர உள்ளார் என்றும், அதன் காரணமாகவே அவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் எனவும் செய்திகள் வெளியாகின. பின்னர் திமுகவுக்கு ஆதரவு குரல் கொடுப்பார் எனக் கூறப்பட்டன. ஆனால் அரசியல் விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்காத விஜய், தனது ரசிகர்கள் மூலம் நற்பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அரசியல்
நடிகர் விஜயின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடக்ககாலத்தில் தீவிர திமுக அபிமானியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார் சந்திரசேகர். பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவை சந்தித்தார் விஜயின் தந்தை எஸ்.எ.சி. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கிகொண்ட சந்திரசேகர் அதன் பின்பு அமைதியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications