தமிழக டிஜிபி நியமன தாமதத்தில் உள்நோக்கம்.. ஏதோ கோளாறு இருக்கு.. சந்தேகம் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி
திருச்சி: "தமிழக காவல்துறை டிஜிபி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த, 2023 ஜூன் மாதம், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பியாக பொறுப்பேற்றார். சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதனால், புதிய டி.ஜி.பியை நியமனம் செய்யும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு கால தாமதம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணத்தின்போது மக்கள் மத்தியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது. 2021 தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் அறிவித்தனர். 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் திமுகவினர் 98% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் சொல்லிவருகிறார்கள். இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி, அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, கடலெண்ணை, நல்லெண்ணை என அனைத்து விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. கட்டுப்படுத்த அரசுக்குத் திறமையில்லை.
சமீபத்தில் அமைச்சர் நேரு பேசியபோது, எம்ஜிஆருக்குத்தான் பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது, இப்போது ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று சொன்னார். எம்ஜிஆருக்கு இணை வைத்து எவரும் பேச முடியாது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் இருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இரண்டே மாதத்தில் நிறைவேற்றினார்கள். தமிழகத்தில் அப்படியல்ல, ஓட்டுகளைப் பெறுவதற்கு அழகாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் அந்தர்பல்டி அடிப்பார்கள். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. திமுக தோல்வியடைவது உறுதி, அந்த பயத்தில் தான் மகளிர் உரிமைத் தொகைக்கான விதியைத் தளர்த்தி கொடுக்கிறார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபி வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். 3 மாதத்துக்கு முன்பாகவே பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் மூவரை பரிந்துரைப்பார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்வார்கள். இதில் என்ன தாமதம், உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை. ஏதோ கோளாறு உள்ளது. என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications