தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள்.. கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்.. சிவி கணேசன் பேட்டி!
தமிழ்நாட்டில் தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் இருப்பதாக சிவி கணேசன் கூறியுள்ளார்.
திருச்சி: வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்பதால், தமிழ்நாட்டு நிறுவனங்களும் , முதலாளிகளும் வட மாநில தொழிலாளர்களையே பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொல்லப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பகிரப்பட்டன.

வட மாநில தொழிலாளர்கள்
இது தேசிய அளவில் பேசப்பட்ட சூழலில், வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்திகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு தெரிவித்தார். அதேபோல் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

திருச்சியில் ஆய்வு
இதனிடையே வட மாநில தொழிலாளர் தொழிலாளர்கள் பற்றிய கணக்கீடு அவசியம் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான கணக்கீடு விவரங்கள் பற்றி அமைச்சர் கணேசன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் மிளகுபாறையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சிவி கணேசன்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கணேசன் கூறுகையில், இஎஸ்ஐ மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக செயல்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.

கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்
தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் பற்றிய கேள்விக்குய், தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டந்தோறும் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை.

தமிழ்நாடு அரசு காக்கும்
தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றும், தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் பீகார் அரசு குழுவிடம், அம்மாநில தொழிலாளர்கள் கூறி உள்ளனர். அதனை அந்த அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. எந்த வேறுபாடுமின்றி அனைத்து மாநில தொழிலாளர்களையும் அரசு காக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications