முதல்வர் பற்றி தகாத வார்த்தைகள்.. ஜாமீன் பெற்ற பாஜக தலைவர் இன்னொரு வழக்கில் அதிரடியாக கைது!
திருச்சி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புத்தூரில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி புத்தூர் நான்கு சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர்.

தகாத வார்த்தைகள்
பாஜக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாஜகவினர், முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜகவினரை கண்டித்து திமுகவினரும் புத்தூர் நால்ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுகவினர் புகார்
மேலும் பாஜகவினர் தகாத வார்த்தைகள் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பாஜகவினர் மீது திமுகவினர் புகார் அளித்தனர். இதேபோல, இச்சம்பவம் தொடர்பாக திருச்சி உறையூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

9 பேர் கைது
இதையடுத்து முதல்வர் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உட்பட 9 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களில் 7 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

பெண் போலீசாரை தாக்கிய வழக்கு
இந்நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி புத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது, அங்கு பணியிலிருந்த பெண் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை அவதூறாக பேசி கைகளால் இடித்து தள்ளிவிட்டது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ராஜசேகரன் உள்ளிட்ட பாஜகவினர் மீது கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மற்றொரு வழக்கில் கைது
அந்த வழக்கில் ராஜசேகரனை கைது செய்வதற்கு ஜே.எம்.2 நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கடிதத்தை கன்டோன்மென்ட் போலீசார் நேற்று மத்திய சிறையில் ஒப்படைத்தனர். இதன் மூலம், பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மேலும் ஒரு வழக்கில் கைதாகியுள்ளதால், ஏற்கெனவே வழங்கப்பட்ட ஜாமீனில் அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications