திருச்சியில் 2008ல் கார் பார்க்கிங் வழங்காத பில்டர்.. ஆனால் வீடு வாங்கியவருக்கு இப்போது ஜாக்பாட்
திருச்சி: திருச்சி கரூர் புறவழிச்சாலையைச் சேர்ந்த பாமினி சோமசுந்தரம் என்பவர், கரூர் புறவழிச்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளார். அவரது குடியிருப்பில் கார் நிறுத்துமிடம் வழங்கவில்லை.. அவர் வீடு வாங்கிய கட்டுமான நிறுவனம் விற்பனை பத்திரத்தின்படி கார் நிறுத்துமிடம் வழங்கவில்லை. இதனால் அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வீடு வாங்கிய பாமினி சோமசுந்தரத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடு வாங்குவோர் ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.. குறிப்பிட்டஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். அந்த ஒப்பந்தம் செய்யும் நிறுவனத்தின் பில்டர் திட்டத்திற்கு தான் ரெரா அப்ரூவல் கிடைக்கும். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், வீடு வாங்குவோர், அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் ரெரா அனுமதி இருந்தால் தான் வாங்க வேண்டும். இப்போது அடுக்குமாடி குடியிருப்பு, வீடுகள் வாங்க வேண்டும் என்றால் ரெரா அப்ரூவல் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பார்க்கின்றன.

ஏனெனில் வீடு எப்படி கட்டப்படும், பெயிண்ட், சைஸ், போர்வெல், லைட்டிங், இண்டீரியர், பார்க்கிங், கழிவு நீர் வெளியேற்றப்படும் வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பில் உள்ள லிப்ட் உள்பட வீட்டின் அனைத்து வசதிகளும் எப்படி செய்யப்படும் என்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். எப்போது கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்ற விவரமும் இருக்கும்.எனவே இந்த ரெரா அப்ரூவல் இப்போது முக்கியமான உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம்.
திருச்சி கரூர் புறவழிச்சாலையைச் சேர்ந்தவர் பாமினி சோமசுந்தரம் என்பவர் கரூர் புறவழிச்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் ஒரு வீட்டை கார் நிறுத்துமிடத்துடன் 22-08-2008 அன்று விலைக்கு வாங்கியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுமான நிறுவனம் விற்பனை பத்திரத்தின்படி கார் நிறுத்துமிடம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
கூடுதல் பணத்தை கொடுத்தால் தருவதாகக் கூறியதன் அடிப்படையில், பாமினி சோமசுந்தரம் கார் நிறுத்துமிடத்துக்காக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கூடுதலாக தந்துள்ளார். இதையடுத்து கட்டுமான நிறுவனமும், இடஉரிமையாளர்களும், தனியாக பாதுகாப்பில்லாத கார் நிறுத்துமிடத்தை வழங்கியிருக்கிறார்கள்.
இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவு படி, அந்த குடியிருப்பில் உரிமமற்ற கட்டுமானங்களை (பாமினி சோமசுந்தரத்துக்கு வழங்கப்பட்ட கார் நிறுத்துமிடம் உள்பட) மாநகராட்சி அகற்றியது. இதனால், பாதிக்கப்பட்ட பாமினி சோமசுந்தரம், உரிய இழப்பீடு கேட்டு திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 29-4-2021 அன்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கை ஆணைய தலைவர் சேகர், உறுப்பினர் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில் முறையற்ற வணிக செயலுக்காக எதிர்தரப்பினர் கூட்டாகவோ, தனித்தனியாகவோ பாமினி சோமசுந்தரத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை மனை வாங்கிய 2008-ம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.25 ஆயிரமும், உரிய கார் நிறுத்துமிடத்தை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். நுகர்வோர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக அவருக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் பார்க்கிங் வசதியும் கிடைக்க போகிறது.












Click it and Unblock the Notifications