Thug Life: கமல் பேசியதில் என்ன தப்பு? அவர் ஏன் மன்னிப்பு கேட்கணும்? அமைச்சர் KN நேரு ஃபுல் சப்போர்ட்
திருச்சி: "கன்னட மொழி தொடர்பான சர்ச்சை விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதை யாரும் விரும்பவில்லை. அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை" என திமுக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ள சூழலில் இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கமல் பேச்சால் கர்நாடகாவில் எதிர்ப்பு
நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை (ஜூன் 5 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழா மேடையில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி உருவானதாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் முன்னிலையில் கூறினார். கமலின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டன.
கன்னட அமைப்புகள் எச்சரிக்கை
தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் பேசியதற்கு, கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் தங்களுடைய எதிர்ப்பை மீறி திரையங்குகளில் கமல் படத்தை வெளியிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடும் கர்நாடகா திரையரங்கங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கமலுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்.
நீதிபதி கேள்வி
கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தால் சரியாகி இருக்கும். இந்த பிரச்சனை சுமுகமாக முடிந்து இருக்கும். மேலும் கமல் மன்னிப்பு கேட்பதில் அவ்வளவு என்ன ஈகோ? கன்னட மொழி குறித்து பேச அவர் என்ன மொழியியல் வல்லுநரா? எதை வைத்து இப்படி பேசியுள்ளார்? கன்னடம் தமிழ் மொழியில் இருந்துதான் வந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார்.
கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், 'தக் லைஃப்' திரைப்படத்தின் கர்நாடக ரிலீஸ் ஒத்திவைக்கப்படுள்ளது. மற்ற இடங்களில், திட்டமிட்டபடி 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகிறது. தமிழ்நாட்டில் நாளை ஒரு சிறப்புக் காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு ஆதரவு
இந்தநிலையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை, அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம், கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "கமல்ஹாசன் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? தமிழில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வந்தன. அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications