என்னங்க சொல்றீங்க! ஸ்ரீரங்கம் பூத்தில் 5 ஓட்டு மட்டுமே வாங்கிய திமுக! பூத் கமிட்டியே 14 பேராச்சே!
திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த வாக்குச்சாவடியில் திமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் 14 பேர் இருந்தும், கட்சிக்கு இவ்வளவு குறைந்த வாக்குகள் கிடைத்திருப்பது கட்சி தலைமையையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், வார்டு செயலாளர், இளைஞரணி, மகளிரணி, ஐடி விங் என 50க்கும் மேற்பட்டோர் பதவியில் இருந்தும் அக்கட்சி 5 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது திமுக நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் திமுகவினரே அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தது. இந்த நிலையில், இந்த முறை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலின் மைய சக்தியாக உருவெடுத்துள்ளது.

234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெருங்கட்சியாக வெற்றி பெற்று 60 ஆண்டுகால திராவிட சகாப்தத்துக்கு முடிவு கட்டியுள்ளது. ஆண்ட திமுக கூட்டணி 73 இடங்களிலும், எதிர்க் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஸ்ரீரங்கம் தொகுதி
இந்நிலையில், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் எஸ். துரைராஜ் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஆர். மனோகரனும், தவெக சார்பில் ரமேஷும் களமிறங்கினர். மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் 1 லட்சத்து 3 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
5 ஓட்டுகள்
திமுக வேட்பாளர் துரைராஜ் 69 ஆயிரத்து 645 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளர் மனோகரன் 65 ஆயிரத்து 819 வாக்குகள் பெற்றார். தொகுதி முழுவதும் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்குச்சாவடி வாரியான வாக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91-வது வாக்குச்சாவடியில் திமுக வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திமுகவினர் அதிர்ச்சி
அதே வாக்குச்சாவடியில் அதிமுக 236 வாக்குகளும், தவெக 51 வாக்குகளும் பெற்றுள்ளன. இதனால் அந்த பகுதியில் திமுக அமைப்பு முற்றிலும் செயலிழந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அதே பகுதியிலிருந்த 87-வது வாக்குச்சாவடியில் திமுகவுக்கு 42 வாக்குகளும், 93-வது வாக்குச்சாவடியில் 41 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் திமுக நிர்வாகிகள் மற்றும் அடிப்படை அமைப்புகள் கூட திமுக வாக்களிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது.
திமுக பூத் கமிட்டி
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் என குறைந்தது 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் கட்சிக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி. இதனால் கட்சியின் சொந்த நிர்வாகிகளே வாக்களிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
ஒற்றை இலக்க வாக்குகள்
மேலும், "இந்த விவகாரத்தை கட்சி தலைமை தீவிரமாக விசாரிக்க வேண்டும். யார் செயல்படவில்லை, யார் கட்சிக்கு எதிராக வேலை செய்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேசிய திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்" என்று சுருக்கமாக பதிலளித்துள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு ஏற்பட்ட இந்த நிலை, கட்சியின் அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ள நிலையில், ஆளுங்கட்சியாக இருந்தும் சில வாக்குச்சாவடிகளில் ஒற்றை இலக்க வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications