நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னம்? துரை வைகோ சொன்ன விஷயம்.. டக்கென திரும்பிப் பார்க்கும் திமுக!
திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என துரை வைகோ கூறியுள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ள நிலையில் துரை வைகோ இவ்வாறு கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரம், 100 நாள் வேலைத் திட்டம் ஆகிய விவகாரங்களில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக துரை வைகோ செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,'காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து விட்டது. காவிரி பிரச்சனை இரு மாநில பிரச்சனை என்பதால் இதில் மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
100 நாள் வேலை திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.2.70 லட்சம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு நடப்பாண்டில் ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இப்படியே போனால் இந்த திட்டமே இல்லாத நிலை உருவாகிவிடும்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த துரை வைகோ, "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது. எங்கள் கூட்டணியின் இலக்கு மதவாத பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது தான். அதை நோக்கித் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததன் காரணமாக சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்கும் என்கிற ஆசையில் தான் எடப்பாடி இருக்கிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் சிறுபான்மை மக்களுக்கு தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்களின் அடிப்படையில் போட்டியிடுவோம். கண்டிப்பாக எங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். அதுவே கட்சி நிர்வாகிகளின் எண்ணமும். முதலமைச்சரும் இதனை ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதவாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அது தான் மிக முக்கியம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்" எனத் தெரிவித்தார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம் எனக் கூறியுள்ளார் துரை வைகோ.












Click it and Unblock the Notifications