“ஃபுல் தண்ணி”.. கொள்ளிடம் பாலத்துக்கு அடியில் படுத்து நள்ளிரவில் அலறிய நபர்.. பத்திரமாக மீட்பு!
திருச்சி: தண்ணீர் வரத்து அதிகரிப்பது தெரியாமல், திருச்சி ஸ்ரீரங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் சிமெண்ட் கட்டையில் ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்தார். முக்கொம்பு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய நிலையில், தீயணைப்பு வீரர்களால் கயிறு கட்டி மீட்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டது. காவிரி நீர் அதிகளவில் வந்ததால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. இந்நிலையில், மேட்டூா் அணையில் இருந்து உபரி நீா் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிரியில் தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வருகிறது.

இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 31,000 கன அடியும், கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மண் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பணை உடைந்தது. மேலும், ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் காங்கிரிட் தூண்கள் அரித்து, கோபுரம் சாயும் நிலையில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
முன்னதாக, கொள்ளிடம் ஆற்றில் இன்று அதிகளவில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் ஒருவர் தண்ணீரில் சிக்கிக் கொண்டிருந்ததை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்தின் தூண் அருகே சிக்கிக் கொண்டு நின்ற வயதான நபரை கீழே இறங்கி, கயிறு போட்டு தூக்கி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். விசாரித்ததில் அவர் அந்த பகுதியை சேர்ந்த 56 வயதான சசிக்குமார் என தெரியவந்துள்ளது.
கூலித் தொழிலாளியான சசிக்குமார் தினமும், வேலை முடிந்ததும் மது அருந்திவிட்டு கொள்ளிடம் பாலத்தின் கீழ் தூண் பகுதியின் கீழ் உள்ள சிமெண்ட் கட்டையில் வந்து படுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். தண்ணீர் வரத்து அதிகரிப்பது பற்றி அறியாமல் நேற்றும் அதேபோல அங்கு வந்து படுத்துள்ளார்.
இன்று அதிகாலையில் விழித்தபோதுதான் தன்னை சுற்றி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, தண்ணீர் மேலும் அதிகரித்து, அவர் படுத்திருந்த கட்டையிலும் நீர் செல்ல ஆரம்பித்தது. இன்று காலையில் அவர் கூச்சலிட்ட நிலையில் தான் அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொல்லி மீட்டுள்ளனர்.
அந்த நபரை மீட்ட தீயணைப்பு துறையினர் அவருக்கு அறிவுரைகள் சொல்லி, இனிமேல் இங்கு வந்து படுக்கக்கூடாது, எந்த நேரத்தில் தண்ணீர் அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications