குஜராத்தில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ‘டீம்’.. கோடநாடு கொலை வழக்கில் செல்போன் தகவல்கள் ஆய்வு!
திருச்சி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தகவல்களை சேகரிக்க குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வந்துள்ளது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேக வளையத்தில் இருப்பபர்களின் செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தகவல்களைச் சேகரிப்பதற்காக குஜராத்தில் இருந்து தேசிய தடவியல் பல்கலைக்கழக நிபுணர்கள் திருச்சி வந்துள்ளனர். செல்போன், தொலைபேசி டவரிலிருந்து தகவலை சேகரிக்க தடவியல் நிபுணர்கள் திருச்சி வந்துள்ளனர். திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தடவியல் நிபுணர்கள் சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து தகவலை சேகரிக்கின்றனர்.
கோடநாடு சம்பவம் நடந்த நாளில் பதிவாகியிருந்த செல்போன், தொலைபேசி டவரில் தகவலை தடயவியல் குழுவினர் சேகரிக்கின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 60 தொலைபேசி எண்கள், 19 டவர் இடங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications