அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி.. டெங்கு காய்ச்சல் என தகவல்
திருச்சி: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் திருச்சி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளருமான சி விஜயபாஸ்கர் திருச்சி மாவட்டம் விராலிமலை பகுதியில் இலுப்பூரில் வசித்து வருகிறார். கட்சி பணிகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவ்வப்போது சுகாதாரத்துறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜயபாஸ்கர் திருச்சியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக விஜயபாஸ்கருக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாதாரண சளி, காய்ச்சல்களுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல், மலேரியா, டைப்பாய்டு போன்ற காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. எனவே தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழக அரசும் மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மழைக்கால காய்ச்சல் தடுப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தினமும் 30 முதல் 40 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் இதுவரை 7 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு குறையும் என்றும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications