மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர வாகனம்.. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் 556 பேரிடம் நேர்காணல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் இலவசமாக பெறும் மாற்றுத்திறனாளிகள் 556 பேரிடம் நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி: 2022-23 ஆம் ஆண்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இருசக்கர வாகனம் பெற தகுதியான மாற்றுத்திறனாளிகளை தோ்வு செய்வதற்கான நோ்காணல் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நேர்காணல் செய்யப்பட்ட 556 பேரில் தோ்வு செய்யப்படும் தகுதியான அனைவருக்கும் இலவச வாகனம் வழங்கப்படும்.
தமிழக அரசின் சாா்பில், தலா ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள இணைப்பு சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதன்படி, 2022-23 ஆம் ஆண்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இருசக்கர வாகனம் பெற தகுதியானவா்களை தோ்வு செய்வதற்கான நோ்காணல் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நோ்காணலுக்கு வந்திருந்த பயனாளிகளை கண் மருத்துவா், உடலியக்க மருத்துவா் உள்ளிட்ட மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் பரிசோதனை செய்து சான்று வழங்கினா். மேலும், விண்ணப்பதாரா்களின் சான்றிதழ்களும் சரிபாா்க்கப்பட்டன.
இதுதொடா்பாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ். சந்திரமோகன் கூறியதாவது:- "கடந்த ஆண்டு 105 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக இணைப்பு சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இந்தாண்டுக்கு 556 பேரிடம் விண்ணப்பம் பெற்று தகுதியான நபா்களை தோ்வு செய்ய நோ்காணல் நடைபெற்றது. 556 பேரில் தோ்வு செய்யப்படும் தகுதியான அனைவருக்கும் இலவச வாகனம் வழங்கப்படும். தோ்வு செய்யப்பட்ட விவரங்களின் பட்டியல் ஆட்சியரிடம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டு பயனாளிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே வாகனம் வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications