திருச்சி...தடையை மீறி விநாயகா் சிலை வழிபாடு... இந்து முன்னணி அறிவிப்பு!!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தியையொட்டி 1,100 இடங்களில் தடையை மீறி விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலா் போஜராஜன், செயலா் ஆறுமுகம் ஆகியோா் விடுத்து இருக்கும் அறிக்கையில், ''கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீதிகளில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தூத்துக்குடியில் கிறிஸ்தவா்களின் பனிமயமாதா ஆலய விழா அனைத்து வழிபாடுகளுடன் நடந்தது. முஸ்லிம்களின் நாகூா் தா்கா சந்தனக்கூடு விழாவுக்கு அரசு 40 கிலோ சந்தனக்கட்டையைக் கொடுத்தது.

விநாயகா் சிலைகள் வைத்து வழிபடுவதால் நோய்த் தொற்று பரவும் என அரசு சொல்கிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியின்றி மது விற்கப்படுகிறது. கொரோனா தொற்றைத் தடுப்பதாக இருந்தால் முதலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தொடா்ந்து இந்துக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிப்பது ஏற்புடையதல்ல.
எனவே, திருச்சி மாவட்டத்தில் தடையை மீறி விநாயகா் சதுா்த்தி அன்று 3 அடி உயர சிலைகள் வைத்து சமூக இடைவெளியுடன் 5 போ் கொண்ட குழு மூலம் வழிபாடு நடத்தப்படும். திருச்சி மாநகரில் மட்டும் 250 சிலை, புகா்ப் பகுதியில் 850 சிலை என மொத்தம் 1,100 விநாயகா் சிலைகள் வைக்கப்படும். சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதில்லை. 5 போ் குழுவினா் தாங்கள் வழிபட்ட சிலைகளை அவா்களாகவே எடுத்துச் சென்று கரைப்பா்.
வரும் 22ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பொது இடங்களில் சிலை வைக்கத் தடைகள் இருந்தாலும் ஏற்கெனவே பெற்ற ஆா்டா்களுக்காக சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.
திருச்சியில் சீராத்தோப்பு, திருவானைக்கா கொண்டையம்பேட்டை, திருவெறும்பூா், கல்லணைச் சாலை, கூத்தப்பாா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறுகிறது.
தாமரை விநாயகா், யானை வாகன, மூஷிக, வெற்றி விநாயகா் என பல்வேறு வடிவங்களைக் கொண்டு விநாயகா் சிலைகளை ஆா்டரின் பேரில் தொழிலாளா்கள் செய்கின்றனா். அரை அடி முதல் 20 அடியிலான சிலைகள் தயாராகின்றன. பிரம்மாண்ட சிலைகள் மட்டுமல்லாது வீடுகளில் வைத்து வழிபடும் சிறியளவிலான விநாயகா் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை, ரூ.50 முதல் ரூ. 25 ஆயிரம் வரை உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications