"ஆயில் லீக்.." திருச்சி ஏர் இந்தியா விமானத்தில் என்ன நடந்தது? நொடிகளில் பைலட் எடுத்த சரியான முடிவு
திருச்சி: நேற்று திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்த விமானம் இரவு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதற்கிடையே ஏர் இந்தியா விமானத்தில் என்ன நடந்தது. இந்த சிக்கலுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருச்சியில் இருந்து நேற்று மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் விமானம் சார்ஜா நோக்கிப் புறப்பட்டது. இருப்பினும், சில நிமிடத்திலேயே விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.

தரையிறங்கியது: சுமார் இரண்டு மணி நேரம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டு இருந்த விமானம் இரவு 8.15 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த எந்தவொரு பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. துரிதமாகச் செயல்பட்டு விமானத்தைத் தரையிறக்கிய விமானிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே கோவையில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சில பிரத்தியேக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெல்லி லேண்டிங் இல்லை: விமானத்தின் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் தான் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாகவே பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க பைலட்கள் முடிவு செய்தனர். ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் பிரச்சினை என்பதால் தரையிறங்கும் போது வீல் சரியான நேரத்தில் கீழே வராமலும் போகலாம். அப்படி எதாவது நடந்தால் பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான அனுமதியும் விமானத்திற்குக் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், தரையிறங்கும் போது வீல் சரியாக இறங்கியதால் நார்மல் லேண்டிங் முறையிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் நார்மல் லேண்டிங் முறையிலேயே தரையிறக்கப்பட்டதை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
என்ன பிரச்சினை: விமானம் புறப்பட்ட உடனே சில நொடிகளில் சிஸ்டம் செயலிழப்பைக் குறிக்கும் காக்பிட் மாஸ்டர் அலராம் ஒலித்து இருக்கிறது. என்னவென்று பைலட் செக் செய்தபோது தான் லேண்டிங் வீல் பகுதி உள்ள இருக்கும் அண்டர்கேரேஜை கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக் அமைப்பில் இருந்த எண்ணெய் வெளியேறியது தெரிய வந்தது. இதுவே ஹைட்ராலிக் பிரச்சினையை ஏற்படுத்தி மாஸ்டர் எழுப்பொலியை ஒலிக்கச் செய்துள்ளது.
மற்றபடி விமானத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லையாம். விமானம் சாதாரணமாகவே பறந்துள்ளது.. ஏர் இந்தியாவின் போயிங் 737-800 வகை விமானத்தில் தான் இது நடந்து இருக்கிறது. ஹைட்ராலிக் அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையிலேயே இந்த போயிங் விமானம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிதாக எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
சரியான முடிவு: இருப்பினும், பாதுகாப்பு கருதி விமானிகள் திருச்சி விமான நிலையத்திற்குத் திரும்ப முடிவு செய்தனர். மேலும், முழு எரிபொருளுடன் ஓவர் வெயிட் லேண்டிங் செய்தால் ஆபத்து அதிகம் என்பதால் எரிபொருளை காலி செய்ய முடிவு செய்தனர். இதன் காரணமாகவே ஏர்போர்ட்டில் இருந்து சற்று தொலைவில் விமானம் சுமார் 2 மணி நேரம் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. அதன் பிறகு விமானம் இறங்கும் போது முதல் முயற்சியிலேயே வீல்கள் சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதனால் விமானம் வழக்கமான லேண்டிங் முறையிலேயே தரையிறக்கப்பட்டது.
ஒரு வேலை வீல்களை இறக்க முடியாமல் போய் இருந்தால் பெல்லி லேண்டிங் முறையில் தரையிறக்கப்பட்டு இருக்கும். பெல்லி லேண்டிங் முறையில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்காகத் திருச்சி விமான நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓடுதளத்தில் வெப்பத்தைக் குறைக்க ஓயிட் ஸ்ப்ரே தெளிக்கப்பட்டு இருந்தது. மேலும்,20 ஆம்புலன்ஸ்கள், 18 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.












Click it and Unblock the Notifications