டுபாக்கூர் பூசாரி கொடுத்த மருந்தால் வயிற்றில் கட்டி.. 12 மாதம் குழந்தை என நினைத்த பெண்..!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குழந்தை பாக்கியத்திற்கு மருந்து தருவதாக கூறி தந்த மருந்தை சாப்பிட்டதால் வயிற்றில் கட்டி ஏற்பட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரையடுத்து போர்ஜரி பூசாரி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Recommended Video
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனாலும் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்தடுத்து இரு குழந்தைகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மற்றும் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் இருந்துள்ளனர்.
இருந்தும் குழந்தை பேறுக்காக தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் அப்பெண் மீண்டும் கருத்தருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு கோவில்களுக்கும் அந்த பெண் சென்று தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென வேண்டுதல்கள் வைத்துள்ளார்.

மோசடி செய்த பூசாரி
இந்நிலையில் திருச்சிக்கு கட்டிட வேலைக்கு வந்த நரியம்பட்டியை சேர்ந்த நல்லுசாமி என்ற பூசாரி குழந்தை பாக்கியத்திற்காக தன்னிடம் பச்சிலை மூலிகை உள்ளதாக கூறி உள்ளார். அதன்படி சம்பந்தப்பட்ட பெண் நரியம்பட்டிக்கு சென்று நல்லுசாமியிடம் பச்சிலை மூலிகை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் அவரின் வயிறும் கருத்தரித்தது போல் பெரிதாக மாறியது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் தொடர்து குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டுமானால் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் என்றும், அதற்காக பூஜைகள் செய்ய வேண்டுமெனக் கூறி அடிக்கடி கணிசமான தொகையையும் பெற்றுள்ளார்.

சோதனை செய்யக்கூடாது என மிரட்டல்
இந்நிலையில் குழந்தையின் நிலை குறித்து மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொள்வதாக அவர் பூசாரி நல்லுசாமியிடம் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த நல்லுசாமி மருத்துவமனைக்கு செல்லக்கூடாது எனவும், மீறி மருத்துவமனைக்கு சென்று ஏதேனும் பரிசோதனை மேற்கொண்டால் தாயின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் பயமுறுத்தியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் அந்த பெண்ணின் செலவில் தனது வீட்டில் நடத்தியுள்ளார்.

குழந்தை பிறக்குமென தேதி
மருந்து சாப்பிட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள அந்த பெண் கூறிய போது நல்லுசாமி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் உயிருக்கு ஆபத்து என்று கூறி மீண்டும் பயமுறுத்திவிட்டார். இதனால் பின் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்காக மூன்று முறை தேதி கொடுத்த பூசாரி மூன்று முறையும் தேதி கடந்துள்ளது.

பெண் வயிற்றில்
மருந்து தொடர்ந்து சாப்பிட்டு 12 மாதங்கள் ஆகியும் குழந்தை பிறக்காத நிலையி சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு பார்த்தபோது வயிற்றில் பெரிய அளவிலான கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நல்லுசாமி வீட்டிற்கு சென்று கேட்கவே ஆம் அது கட்டிதான் அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார். சுமார் 2 லட்சம் வரை அந்தப்பெண் செலவழித்துள்ள நிலையில் வயிற்றில் கட்டி இருப்பது தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட நபர் மீது மணப்பாறை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நல்லுசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications