கி வீரமணி போட்ட குண்டு.. ”இந்தியா கூட்டணி மட்டும் ஆட்சிக்கு வரட்டும்!” ஆளுநர் பதவியே இருக்காதா?
திருச்சி: தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தி வருவதாக திராவிடர் கழக தலைவா் கி. வீரமணி தெரிவித்து உள்ளார்.
திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன விபரம் வருமாறு: சமூக நீதியை நிலைநாட்டவும், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை அறியவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களையும், ராகுல் காந்தியையும் பாராட்டுவது, பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 3-ந் தேதி வரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மேற்கொள்ளும் பரப்புரையை அனைத்து கட்சி தலைவர்கள், கட்சி சாராத அமைப்புகள், சமுதாய பெருமக்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "பங்காரு அடிகளாரின் கருத்து, கொள்கைகளில் எங்களுக்கு வேறுபாடு இருந்தாலும், அவரின் கல்வி மற்றும் மனிதநேய சேவைகள் பாராட்டுதலுக்குரியது. அவரது மறைவுக்கு திராவிடா் கழகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. உடல் உறுப்பு தானம் கொடுத்தவர்களுக்குகூட அரசு மரியாதை வழங்குகிற மகத்தான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே பங்காரு அடிகளாரின் மனிதநேயத்தை போற்றுவது அரசின் கடமை. ஆகவே அவருக்கு அரசு மரியாதை வழங்குவதில் தவறில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும். மத்திய பாஜக அரசு, 'விஸ்வகா்மா' திட்டத்தை அறிவித்து இளைஞா்களை மீண்டும் அவா்களது குலத்தொழிலை செய்ய தூண்டுவது கண்டிக்கத்தக்கது. இந்தத் திட்டத்தை கண்டித்து, அக். 25 முதல் நவ. 3 வரை தமிழகத்தில் பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளோம். இதுதொடா்பாக நாள்தோறும் 2 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட தொழிலாளர் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவர்னருக்கு இல்லாத அதிகாரத்தை எல்லாம் அவர் செய்து கொண்டு இருக்கிறார். யாருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் முடிவு. அதில் கவர்னர் தலையிட முடியாது.
தற்போது கவர்னர் அவருக்கான பணியை செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயமாக கவர்னர் என்ற பதவி இருக்க வேண்டுமா? என்ற கேள்வி மறுபரிசீலனைக்கு உள்ளாகும்." என்று அவர் கூறினார். இந்த பேட்டியின்போது, திராவிடா் கழக துணைத் தலைவா் கலி. பூங்குன்றன், நிா்வாகிகள் வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமாா், சு. அறிவுக்கரசு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.












Click it and Unblock the Notifications