''ஆட்சியை இழக்க நேரிட்டால் நாம் மீண்டும் 10 ஆண்டுகாலம் வெளியே நிற்போம்''! கே.என்.நேரு போட்ட குண்டு!
திருச்சி: ''ஆட்சியை இழக்க நேரிட்டால் நாம் மீண்டும் 10 ஆண்டுகாலம் வெளியே நிற்க வேண்டிய சூழல் வரும்'' என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில் பேசிய போது, நேரு இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வாக்குச்சாவடி முகவர்கள் கவனக் குறைவாக இருந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டும், வெற்றி பெற்றுவிடுவோம் என அதீத நம்பிக்கையில் கட்சியினர் சும்மா இருந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கும் விதமாகவும் நேரு பேசியதாக கருதப்படுகிறது.

இதனிடையே ''ஆட்சியை இழக்க நேரிட்டால் நாம் மீண்டும் 10 ஆண்டுகாலம் வெளியே நிற்க வேண்டிய சூழல் வரும்'' என அமைச்சர் கே.என்.நேருவே ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்டிருப்பதால் அதிமுக முகாம் உற்சாகம் கொள்ள ஆரம்பித்துள்ளது. வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்த கதையாக மாறிவிட்டது.
அமைச்சர் நேரு பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கோபமான அமைச்சர் நேரு, கட்சியினர் பொறுமை காத்து அமர வேண்டும் என ஓபன் மைக்கில் கேட்டுக்கொண்டார். ஆனாலும் கூட்டத்தில் சலசலப்பு ஓயவில்லை. இதனால் மாவட்டச் செயலாளர்கள் போய் பாருங்கள் எனக் கூறி மேடையில் அமர்ந்திருந்தவர்களை கீழே அனுப்பி வைத்தார்.
கடைசியாக உருக்கமுடன் பேசிய நேரு, ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரை அவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதையும் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை ஸ்டாலின் முடிவு செய்யும் இடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் மனதில் தாங்கி ஒவ்வொரு திமுக தொண்டனும் உழைக்க வேண்டும் என உருகினார்.


Click it and Unblock the Notifications
