‛தூக்கம் போனது எங்களுக்கு இல்லை உங்களுக்கு’.. மோடியின் கண்களை பாருங்க! திருச்சியில் ஸ்டாலின் விளாசல்
திருச்சி: வரும் லோக்சபா தேர்தலில் தோல்வி பயத்தில் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. ‛இந்தியா’ கூட்டணி வெல்லப்போவதை நினைத்து அவரது முகம், கண்களில் தோல்வி பயம் தெரிகிறது என முதல்வர் முக ஸ்டாலின் தனது முதல் பிரசார பொதுக்கூட்டமான திருச்சி சிறுகனூரில் பேசினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் காங்கிரசுக்கு 9, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருச்சி சிறுகனூரில் இன்று திமுகவின் முதல் பிரசார பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சேலம் வந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதாகவும், இதனால் திமுகவுக்கு தூக்கம் வரவில்லை எனவும் பேசியுள்ளார். ஆனால் உண்மையில் ஆட்சி முடியப்போகிறது என பிரதமர் மோடிக்கு தான் தூக்கம் வரவில்லை. தோல்வி பயம் என்பது அவரது முகம், கண்களில் தெரிகிறது. தேர்தல் நெருங்கியதால் அவர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார்.
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியிடம் நா்ன ஒரு கேள்வி தான் கேட்டேன். அவர் வாரம் வாரம் வந்தாலும் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பிரதமரால் தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு சிறப்பு திட்டத்தை சொல்ல முடியுமா? இந்த கேள்விக்கு இனி வரும்போதும் கூட பிரதமர் பதில் சொல்ல மாட்டார். ஆனால் அவர் நம்மை விமர்சிக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் 3 ஆண்டுகால சாதனை பட்டியல் சொல்ல வேண்டுமா? அந்த சாதனையை சொன்னால் ஒருநாள் போதாது. நலத்திட்டங்கள் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று வீடியோ பார்த்தேன். அப்போது குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் காசுக்காக யாரையும் எதிர்பார்க்கவில்லை. அண்ணன் ஸ்டாலின் இருக்கிறார். தாய்வீட்டு சீராக மாதம் ரூ.1000 வழங்குகிறார் என ஒரு சகோதரி கூறினார். மேலும் விடியல் பயணம் திட்டத்தில் இலவச பேருந்தில் சென்று கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து வேலைக்கு செல்வதாக இன்னொருவர் கூறினார்.
இப்படி மக்களுக்கான பல திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. ஆனால் பாஜக ஊழல் செய்து வருகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பிரதமர் மோடி நிவாரண நிதியில் பல்லாயிரக்கணகான கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ‛இந்தியா’ எனும் வலிமையான கூட்டணி அமைந்துவிட்டதாக நினைத்து அந்த பயத்தில் தவறுக்க மேல் தவறுகளை மத்திய அரசு செய்கிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது. மணிஷ் சிசோடியோ, ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைது என்பது தேர்தலில் பாஜகவின் தோல்வியை தான் காட்டுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் ‛இந்தியா’ வெல்லும். இந்தியாவையும், ‛இந்தியா’ கூட்டணி வெல்லும்’’ என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications