"குரங்குகள்" அண்ணாமலை கற்றுக்கொண்டது அவ்வளவுதான்.. அமைச்சர் அன்பில் மகேஷ் கொந்தளிப்பு!
திருச்சி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன கற்றுக் கொண்டாரோ, அதற்கு ஏற்றவாறு பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு என்று பேசி இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நவ.4ம் தேதி திருச்சிக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் மற்றும் நவ.6ம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வி திட்டம்
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தை எப்படி திறப்பது, எப்படி எல்லாம் பாடத்தை நடத்தி முடிப்பது என்று யோசித்தபோது, பள்ளிக்கூடத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திறங்கள், ஆனால் இரண்டு வருடம் குழந்தைகளுக்கு படிப்பு இடைவேளை விட்டு விடக்கூடாது என்று ஆலோசனை கூறி, இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு ஊக்கமளித்தார் நம் முதல்வர்.

அன்பில் மகேஷ் ஆய்வு
இந்தியாவில் எந்த ஒரு அரசாங்கமும், இந்த திட்டம் போல் எதுவும் எண்ணி பார்க்கவில்லை. இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு, 1 லட்சத்து 76 ஆயிரம் மையங்கள் எங்களுக்கு தேவைப்பட்டது. ஒரு மையத்தில் 20 குழந்தைகள் என்கிற விதத்தில், 34 லட்சம் குழந்தைகளுக்கு இதை நாங்கள் திட்டமிட்டோம். இந்த திட்டத்தை செயல்படுத்தி நேற்றோடு ஒரு வருடமாவதால், முன்னறிவிப்பு இல்லாமல் குன்னூரில் ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினேன்.

மாபெரும் வெற்றி
அப்போது 20 குழந்தைகளுக்கு 1 தன்னார்வலர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது இந்த திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதை உணர்ந்தேன். இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் கொஞ்சம் காலம் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது தான் உண்மை என்று தெரிவித்தார்.

திருச்சி வரும் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து திருச்சி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, நிறைய நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். குறிப்பாக வரும் நவ.4ம் தேதி டிஎன்பிஎல் திறப்பு விழாவிற்கு வருகை தர உள்ளார். அக்.2ம் தேதி ஹீலியம் பலூன் வெடித்து ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவனுக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் கற்கள் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் சிறு குடல் பாதிப்பை எடுத்துவிட்டு, பெருங்குடல் வாயிலாக மட்டுமே பள்ளி மாணவன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் உறுதி
மேல் சிகிச்சைக்காக சிறுவனின் தாயாரிடம் பேசி, ஆம்புலன்ஸ் வாயிலாக நானே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன். சென்னையில் சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் நானே செய்து தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை பற்றி அன்பில் மகேஷ்
தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, அண்ணாமலை தான் பாடம் கற்றுக் கொண்டதற்கு தகுந்தவாறு, பத்திரிகையாளர்களை பார்த்து குரங்கு என்று பேசியிருக்கிறார். நாங்கள் பாடம் கற்றுக் கொண்டது போல் நாங்கள் நடந்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கிண்டல் செய்தார்.












Click it and Unblock the Notifications