விஜயபாஸ்கருக்கு, அன்பில் மகேஷ் கொடுத்த பரிசு! என்ன தெரியுமா? திருச்சி ஜல்லிக்கட்டில் வென்ற கொம்பன்
திருச்சி: பொங்கலையொட்டி திருச்சி சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான ‛சின்ன கொம்பன்' காளை வென்றது. இதையடுத்து மேடையில் நின்ற விஜயபாஸ்கருக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கிப்ட் கொடுத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி மதுரை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று பாலமேடுவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

மதுரையில் இந்த 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றதாகும். அதேபோல் மாநிலத்தின் பிற இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு நடந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் வந்திருந்தனர். அன்பில் மகேஷ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் ஒரே மேடையில் அருகருகே நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது வாடிவாசலில் இருந்து விஜயபாஸ்கருக்கு சொந்தமான சின்ன கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளையை வீரர்களால் நெருங்க முடியவில்லை. களத்தில் சில முறை சுற்றி ‛வந்து பார்' என்று ஆக்ரோஷம் காட்டிய சின்ன கொம்பனை கடைசி வரை வீரர்கள் யாரும் சீண்டவில்லை. இதனால் விஜயபாஸ்கரின் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற அவரது காளை சின்ன கொம்பனுக்கான பரிசாக அன்பில் மகேஷ் சார்பில் விஜயபாஸ்கருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் விஜயபாஸ்கர் ஒவ்வொரு ஆண்டும் தனது காளையை களமிறக்கி வருவது இங்கே கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications