நான் ஏதாவது சொல்லி முதலமைச்சர் என்னை கூப்பிட்டு திட்டவா? ஆள விடுங்க! எஸ்கேப் ஆன கே.என்.நேரு!
திருச்சி: நான் ஏதாவது சொல்லி முதலமைச்சர் என்னை கூப்பிட்டு திட்டவா? ஆள விடுங்க எனக் கூறி செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை 9.30 மணியளவில் திருச்சி செல்லவுள்ள நிலையில் அவரது டெல்டா பயணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார் அமைச்சர் நேரு. கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை டெல்டாவில் ஆய்வு செய்யவுள்ள முதல்வருக்கு திருச்சி மற்றும் தஞ்சையில் உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதை எடுத்துக் கூறினார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து ஆளுநர் ரவி கூறியது பற்றி ஒரு கேள்வியை முன் வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஏங்க நல்ல விஷயம் நடக்கும் போது ஆளுநரை பற்றியெல்லாம் கேட்கிறீங்க என்றதுடன் நான் ஏதாவது சொல்லி முதலமைச்சர் என்னை கூப்பிட்டு திட்டவா? ஆள விடுங்க எனக் கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.
இதன் மூலம் ஆளுநர் பற்றியோ அவரை விமர்சித்தோ பேசினால் அமைச்சர்களை அழைத்து முதல்வர் திட்டுவாரா என்ற கேள்வி எழுகிறது. நேற்றுக் கூட ஆளுநர் சென்னையில் இல்லாததால் தான் சென்னையில் மழை பெய்கிறது என்று அமைச்சர் பொன்முடி கமெண்ட் அடித்திருந்தார். இந்தச் சூழலில் ஆளுநர் பற்றி பேசவே அமைச்சர் நேரும் தயக்கம் காட்டியிருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை நாளை டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 11ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். சேலம் மாவட்டத்துக்கும் அமைச்சர் நேரு தான் பொறுப்பு என்பதால் அதற்கான ஏற்பாடுகளையும் அவர் தான் கவனித்துக் கொள்கிறார்.
இதனிடையே மாற்றுத்திறனாளிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் நேரு காலதாமதமாக வந்ததாக ஒரு சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 8 மணிக்கு வரச் சொல்லிவிட்டு அமைச்சர் நேரு 9.40க்கு வந்ததாக புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications