சீமான் பேச்சால் வினை? திருச்சி எஸ்பி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்.. நாம் தமிழர் நிர்வாகி கைது
திருச்சி: திருச்சி எஸ்பி வருண் குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்துக்கு சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுத்த புகாரில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி எஸ்பி வருண் குமாருக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு உள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்பியாக இருப்பவர் வருண் குமார் ஐபிஎஸ். இவருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது சாட்டை துரைமுருகன் கைது விவகாரம் தான்.

அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடிய புகாரில் சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
இதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் எஸ்பி வருண் குமாரை அவர் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சீமான் கூறுகையில், ‛‛திருச்சி எஸ்பியாக வருண் உள்ளார். அவரு எங்கள் ஊரை சேர்ந்தவர். தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் என யாரையுமே அவருக்கு பிடிக்கவில்லை. எங்கள் மீது வெறுப்பு உள்ளது. ஏற்கனவே துரைமுருகனை (சாட்டை துரைமுருகன்) சென்னைக்கு வர சொல்லி குண்டாஸில் போட்டது வருண் ஐபிஎஸ்தான். இப்போதும் சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வருவதும் வருண் ஐபிஎஸ்தான். இதையெல்லாம் மறந்துவிடுவோமா?'' என்று கூறியிருந்தார்.
இதற்கு வருண் குமார் சாதிகள் இல்லையடி பாப்பா என பதிலடி கொடுத்து இருந்தார். மேலும் வருண் குமார் ஐபிஎஸ் சார்பில் வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து எஸ்பி வருண் குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படியாக நாம் தமிழர் கட்சியினருக்கும், திருச்சி எஸ்பி வருண் குமாருக்கும் இடையே மோதல் போக்கு என்பது இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கண்ணன் என்பவரை திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் சமூக வலைதளங்கள் மூலம் திருச்சி எஸ்பி வருண் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எஸ்பி வருண் குமார் திருச்சி போலீசில் புகார் செய்தார். நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலின்பேரில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்மூலம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
எஸ்பி வருண் குமார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் கண்ணனை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி திருச்சி எஸ்பி வருண் குமார் கூறுகையில், ‛‛இது அவதூறு வழக்கிற்கான கைது இல்லை. என்னையும், எனது வீட்டு பெண்களையும், குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications