"நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" நவீன வசதிகளுடன் ரேஷன் கடைகள்.. ராதாகிருஷ்ணன் சொன்ன குட் நியூஸ்!
திருச்சி: நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை என்ற திட்டத்தின் கீழ் புதிதாக கட்டக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் வரும் வசதி உள்ளிட்டவை செய்யப்படும் என்று கூட்டுறவு துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி வந்தார். திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து கல்லுக்குழி நியாய விலைக்கடையினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 60,000 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடி தேவையாக இருக்கிறது. அதில் தற்போது பத்து நிலையங்கள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல் பாதுகாப்பு குடோன்கள்
தமிழகத்தில் மழைக்காலங்களில் ஆண்டுதோறும் நெல் நனைகின்றது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 13.5 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க மூடிய குடோன்களும், மூன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்க வாடகை குடோன்களும் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 109 தார்பாய்களான தற்காலிக குடன்களும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது டெல்டா மாவட்டங்களில் 2.6 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாக்கும் வகையில் 20 இடங்களில் புதிய குடோன்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை
தொடர்ந்து, பொது சுகாதார திட்டத்தின் கீழ் நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை என்ற திட்டத்தின் படி ரேஷன் கடைகளை மக்கள் விரும்பும் இடமாக மாற்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 75 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. மேலும் புதிதாக கட்டக்கூடிய ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் வரும் வசதி, வயதானவர்கள் உட்கார வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அரிசி கடத்தல் வழக்கு
இதன்பின்னர் அரிசி கடத்தல் பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, இங்கு சிவில் சப்ளை சி.ஐ.டி.க்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கூட 120 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 100 மெட்ரிக் டன் அரிசி பிடித்துள்ளோம். இதில் முக்கிய கடத்தல் புள்ளியான சக்கரவர்த்தி என்பவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரேஷன் அரிசி கடத்தல் புள்ளிகள் 111 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு இணையான கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடந்த ஓராண்டு காலத்தில் 11,008 அரிசி கடத்தல் வழக்குகளில், 11,121 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பதில் அளித்தார்.

கண்காணிப்பு தீவிரம்
அதேபோல், அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். 3,997 காலிப்பணியிடங்களை மிக விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கெளரவ ரேஷன் கார்டு
இதன் பின்னர் ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டுகள் ரத்து செய்யப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் காடுகள் ரத்து செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொருள் தேவையில்லாதவர்கள் கௌரவ கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications