இன்னும் படபடப்பு அடங்கல..பைலட் எதுவுமே சொல்லாம காப்பாத்திட்டார்! ஏர் இந்தியா பயணியின் திக்திக் பயணம்
திருச்சி: லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி புதுக்கோட்டை எல்லைப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமிட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானம் திருச்சியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலையில் 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் சார்ஜா புறப்பட்டு சென்றது. விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து மேலே பறந்த விமானத்தில் சிறிது நேரத்தல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது.
இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வட்டமடித்து கொண்டிருந்தது. சுமார் 2.30 மணிநேரம் வானில் வட்டமடித்த விமானம் எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.
இந்த நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய பயணி ஒருவர்," விமானம் புறப்பட்டபோது எந்தவித பிரச்சனையும் இல்லை. வழக்கமாக பயணிப்பது போலவே இருந்தது. மேலும் மழை பெய்ததால் வெளியில் இருந்த காட்சிகள் எதுவும் தெரியவில்லை. அவ்வப்போது ஜியோ நெட்வொர்க்கில் மட்டும் சிக்னல் கிடைத்து வந்தது. சார்ஜா நோக்கி விமானம் செல்வதாகவே நினைத்துக் கொண்டிருந்தோம்.
சிறிது நேரத்தில் அவ்வப்போது நெட்வொர்க் கிடைத்த போது சிலர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளை அனுப்பினர். அதனைப் பார்த்து நாங்கள் சற்று பரபரப்பு அடைந்தோம். மேலும் வானிலை தெளிவான பின்பு குறிப்பிட்ட சில பகுதிகள் மீண்டும் மீண்டும் தெளிவாக தெரிந்தது. இதனால் விமானத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம்.
ஆனால் விமானிகள் எங்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை. சிறிய பிரச்சனை தான் இன்னும் சிறிது நேரத்தில் திருச்சியில் தரை இறங்கி விடுவோம் என்று கூறி எங்களுக்கு நம்பிக்கை ஊட்டினர். சிறிது நேரத்தில் விமானத்தின் முதன்மை விமானி பயணிகள் யாரும் பயப்படத் தேவையில்லை. விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு மட்டுமே ஏற்பட்டு இருக்கிறது எனவும், விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் தான் கூறினார்.
தொடர்ந்து செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டே இருந்த நிலையில் பதட்டம் ஏற்பட்டது. டவர் கிடைக்கும் போதெல்லாம் வாட்ஸாப் மெசேஜ்கள் வந்ததால் பதற்றம் அதிகரித்தது. இன்னும் அந்த பதற்றத்தில் இருந்து மீளவில்லை. இருந்தபோதும் விமானம் லேண்டிங் ஆகும்போது கூட எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது. வழக்கமாக ஏற்படும் அதிர்வுகள் மட்டுமே ஏற்பட்டது. விமானத்தை பத்திரமாக தர இயக்கிய விமானிகளுக்கு எங்கள் நன்றி. மேலும் அவசர காலங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி" என உருக்கமாகக் கூறினர்.












Click it and Unblock the Notifications