பஹ்ரைனிலிருந்து நேராக திருச்சி வந்திறங்கிய திருச்சி சிவா! முகத்தில் கடுகடுப்பு! இனி தான் பஞ்சாயத்து
பஹ்ரைனிலிருந்து டெல்லிக்கு கூட செல்லாமல் நேராக திருச்சி வந்திறங்கிய திருச்சி சிவா.
திருச்சி: பஹ்ரைனிலிருந்து இந்தியா திரும்பிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா டெல்லிக்கு கூட செல்லாமல் நேராக திருச்சியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று சேதாரங்களை நேரில் பார்வையிட்டார்.
காரிலிருந்து இறங்கும் போதே மிகுந்த கடுகடுப்புடன் கோபமாக காணப்பட்ட அவர், தற்போது பேசும் மன நிலையில் தாம் இல்லை என்று கூறிவிட்டு சேதப்படுத்தப்பட்ட தனது டொயோட்டா பார்ச்சூனர் காரை சுற்றி சுற்றி பார்த்தார்.
அப்போது நேற்று நடந்த நிகழ்வு குறித்தும், தாக்குதல் சம்பவத்தால் சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்தும் திருச்சி சிவாவிடம் அவரது உறவினர் கராத்தே முத்துக்குமார் விவரித்தார்.

திருச்சி சிவா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் பஹ்ரைனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த திருச்சி சிவா எம்.பி., அங்கிருந்து டெல்லிக்கு கூட செல்லாமல் நேரடியாக இன்று காலை திருச்சி வந்திறங்கினார். விமான நிலையத்திலிருந்து தனது வீட்டுக்கு காரில் வந்து இறங்கிய போதே திருச்சி சிவாவின் முகத்தில் அப்படியொரு கோபம் தெரிந்தது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தயவு செய்து மாலை பேசுகிறேன் இப்போது பேசும் மன நிலையில் இல்லை என செய்தியாளர்களிடம் கூறினார்.

டொயோட்டா பார்ச்சூனர்
ஆனாலும் அவரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால், தமது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி யாரிடமும் தாம் கூறவில்லை என்றும் மிகுந்த மன வேதனையை தருவதாகவும் கூறிவிட்டு வீட்டின் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த தனது டொயோட்டா பார்ச்சூனர் காரை சுற்றி சுற்றி பார்த்தார். அதேபோல் தாக்குதல் நடத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பார்வையிட்டார்.

இன்று மாலை பிரஸ்மீட்
நேற்று நடந்த நிகழ்வுகள் முழுவதையும் கராத்தே முத்துகுமார் தனது மாமா திருச்சி சிவாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அவர், நேரு ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தனது ஆதரவாளர்களிடமும் நடந்தவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டார். இன்று மாலை மீண்டும் திருச்சி சிவா பிரஸ்மீட் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று திருச்சியில் நடந்த இந்த நிகழ்வு ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தர்ம சங்கடம்
திருச்சி சிவா, அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களிடையே நிகழ்ந்துள்ள மோதல் திமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமைச்சர் நேருவின் இமேஜை சரியச் செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications