திருச்சி அருகே இன்ப அதிர்ச்சி தந்த சுங்கச்சாவடி ஊழியர்கள்.. வாகன ஓட்டிகள் அத்தனை பேரும் ஹேப்பி
திருச்சி : திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் அருகே லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தீபாவளி போனஸ் கேட்டு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த நிறுவனம் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் அளிக்க ஒப்புதல் தரவில்லை.. இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்றன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசு நிறுவனங்கள் தீபாவளிக்கு போனஸ் அறிவித்து வருகின்றன. கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு ஒரு மாத போனஸ் வழங்கப்படுகிறது. அதேநேரம் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த போனசும் அறிவிப்பது இல்லை.. அப்படித்தான் திருச்சி அருகே சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை.. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி அமைந்திருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு, முந்தைய காலக்கட்டததில் வழங்கப்பட்டதை போல சுங்கச்சாவடியில் பணியாற்றும் 32 ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் மட்டும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடியில் உள்ள கட்டைகளை மேலே தூக்கி நிறுத்தி விட்டு, ஊழியர்கள் அமர்ந்திருக்கும் அறையை விட்டு வெளியேறி, சுங்கச்சாவடி அருகே உள்ள அலுவலகத்தில் அமர்ந்தார்கள். இதனால் சுங்கச்சாவடி வழியாக கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல தொடங்கின.
இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் சுமுகமான முடிவு ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 3.45 மணிக்கு மேல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இந்த போராட்டம் காரணமாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடியில் சுமார் 20 மணி நேரமாக சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications