இதுலருந்தே தெரியுதே.. “தோல்வி பயம்”.. இடைத்தேர்தல்: பாஜக குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ்!
அவர்கள் பேசுவதில் இருந்தே அவர்களது தோல்வி பயம் தெரிகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
திருச்சி : ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெறுவார்கள் என எதிர்க்கட்சிகள் பேசுவதிலிருந்தே அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டது என்பது தெரிகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 56 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தோல்வி பயம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவார்கள் என எதிர்க்கட்சிகள் பேசுவதிலிருந்து அவர்களுக்கு தோல்வி பயம் இப்போதே தொடங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தார்.

அறிவித்த தேதியில்
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "அறிவித்த தேதியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடைபெறும். செய்முறை தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக ஏதுவாக அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் அந்த தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி கொள்ளலாம்.

தீர்வு காணப்படும்
10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது தேர்தலைப் போன்றது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications