ஆடல் பாடலை ஆர்வமாக பார்த்த மக்கள்.. அதிமுக நிர்வாகிகள் பேச தொடங்கியதும் அவ்வளவுதான்.. அப்செட்
திருச்சி: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும்போது பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் அண்ணா. காங்கிரஸ் மட்டுமே ஆட்சி செய்து வந்த நிலையில், அக்கட்சியைத் தமிழ்நாட்டில் வீழ்த்திய பெயர் அண்ணாவையே சேரும்.
1967ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது திமுக. மொத்தம் 179 இடங்களில் திமுக கூட்டணி வென்று இருந்தது.

அண்ணா
அப்போது எம்ஜிஆரும் திமுகவிலேயே இருந்தார். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைந்த வரை இதே நிலையே இருந்தது. அதன் பின்னர் முதல்வரான கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். அண்ணாவையே தனது அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டதாலேயே அவர் தனது கட்சிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் வைத்தார்.

பிறந்த நாள்
இப்படி தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுக்கும் அண்ணா தான் முன்னோடியாக இருக்கிறார். எனவே, ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள் சமயத்தில் இரு கட்சிகளின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த செப்.15ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாவின் உருவப் படத்திற்கு அதிமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சி
அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி திருச்சி மாவட்ட புறநகர் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பைஞ்சீலி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டம் நடப்பதற்கு முன்னர் மேடையில் ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண அங்கு ஏராளமான மக்கள் கூடி இருந்தனர்.

ஆடல் பாடல்
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் எம்ஜிஆர், அண்ணா வேடமிட்டு வந்து கலைஞர்கள் அவர்களைப் போலவே நடித்துக் காட்டினர். மேலும், மேடையில் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைச் சுற்றுப்புறத்தில் சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் கண்டு களித்தனர். இதனால் அந்த ஒட்டுமொத்த இடமே களைகட்டி காணப்பட்டது.

நடையைக் கட்டிய மக்கள்
இந்த ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பின்னர், அதிமுக நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகள் பேசத் தொடங்கியதுமே அங்கிருந்து பொதுமக்கள் வரிசையாகக் கலைந்து சென்றனர். இதனால் அந்த இடமே வெறிச்சோடி. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்குக் கூடி இருந்த பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் பேச ஆரம்பித்தவுடன் கலைந்து சென்றதைப் பார்த்து அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.












Click it and Unblock the Notifications