திரள்நிதி திருடன்.. பரிதாபம்.. மனைவியை விவாகரத்து செய்தேனா? திருச்சி டிஐஜி வருண்குமார் போட்ட பதிவு!
திருச்சி: திண்டுக்கல் முன்னாள் டிஐஜி வந்திதா பாண்டே மற்றும் திருச்சி டிஐஜி வருண்குமார் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக வெளியான தகவலை, தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலமாக வருண் குமார் முற்றிலும் மறுத்துள்ளார். அதேபோல் திரள்நிதி திருடன் எந்த அளவிற்கு சென்றுவிட்டான் என்று பாருங்கள் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது செல்ஃபோனில் சீமான் பேசிய சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நாதக நிர்வாகிகளான காளியம்மாள் உட்பட பலரையும் அவதூறாக பேசி இருந்தார். இதனை சீமான் மறுக்கவில்லை.

இந்த ஆடியோ கசிந்ததற்கு திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண் குமார் தான் காரணம் என்று சீமான் குற்றம்சாட்டினார். இதன்பின் நாதக நிர்வாகிகள் வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே உள்ளிட்டோரை அவதூறாக விமர்சித்து சோஷியல் மீடியாவில் பதிவிட தொடங்கினர். இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டிய நிலையில், திருச்சி எஸ்பி வருண் குமார் தரப்பில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பிலேயே, மோதுவோம் என்றாகிவிட்டது.. மோதி பார்க்கலாம் என்று சவால் விடுத்தார். இந்த நிலையில் திருச்சி எஸ்பி-யாக இருந்த ஐபிஎஸ் வருண் குமாருக்கு, தமிழக அரசு தரப்பில் டிஐஜி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர் திருச்சி டிஐஜி-யாகவும், இவரின் மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜி-யாகவும் பணியாற்றி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் டிஐஜியாக பணியாற்றி வந்த வந்திதா பாண்டே, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட அவர், அடுத்த அறிவிப்பு வரும் வரை மத்திய அரசு பணியிலேயே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி 10 நாட்களாகும் நிலையில், நேற்று சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் அதிகமாக பகிரப்பட்டது.
அதில் திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குநர் வந்திதா பாண்டே இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக பதிவுகள் வெளியாகியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி டிஐஜி வருண் குமார் தனது வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.
அதில், திரள்நிதி திருடன் எந்த அளவிற்கு சென்றுவிட்டான் என்று பாருங்கள் மக்களே.. பார்க்கவே பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி. ஒரு பாடல் வரி, "நான் உனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்.. சேர்ந்ததே நம் ஜீவனே" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக விவாகரத்து செய்தியை முற்றிலும் வருண்குமார் நிராகரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications