படக்குனு பத்து ப்ளாட்ட வாங்கி போடுங்க.. பறக்கப் போகுது திருச்சி பஞ்சப்பூர்! அரசின் அற்புத அறிவிப்பு!
திருச்சி: திருச்சி மாநகரில் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் திருச்சி புறநகர் பகுதியான பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் சுமார் 400 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் நிலையில் விரைவில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்று சட்டசபை கூட்டத்துடன் நடைபெற்ற நிலையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகக் கொள்கை விளக்க குறிப்பில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் இதயம் என்று திருச்சியை சொல்லலாம். காரணம் தலைநகரான சென்னைக்கு அடுத்து அதிக அளவிலான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் இங்கு அமைந்திருக்கிறது. துப்பாக்கி தொழிற்சாலை, பெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இங்கு இருக்கிறது.

தமிழகத்தின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மையம் திருச்சி தான். சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் தமிழகத்தை இணைக்கும் புள்ளியாக திருச்சி இருக்கிறது. திருச்சியில் ரயில் நிலையம், விமான நிலையம், முக்கியமான மூன்று பேருந்து நிலையங்கள் அமைந்திருக்கிறது.
விமான நிலையத்தை தவிர மற்ற அனைத்துமே திருச்சி நகருக்குள் தான் அமைந்திருக்கிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை நகரில் மையப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திலும் வந்து செல்கின்றன. வெளியூரில் இருந்து வருபவர்கள் திருச்சியில் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் மத்திய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து, சத்திரம் பேருந்து நிலையம் சென்று தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு போக வேண்டும்.

இதனால் திருச்சி மாநகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது, இதனையடுத்து திருச்சியில் புறநகரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து திருச்சி புறநகர் பகுதியான பஞ்சப்பூரில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது, போல பஞ்சப்பூரில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் திட்டங்கள் ஆகியவற்றோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாக கொள்கை விளக்க குறிப்பு இன்று வெளியிடப்பட்டது.
அதில் திருச்சியில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி காலி பணியிடங்களை நிரப்புவது, நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே பஞ்சப்பூரின் டைடல் பார்க், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்டவை காரணமாக வீட்டுமனை விற்பனை விண்ணை தொட்டிருக்கிறது. இதை அடுத்து அருகில் உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடித்திருக்கும் நிலையில் அங்கு மக்கள் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications