ஸ்தம்பித்த திருச்சி.. விஜயை காண குவிந்த தொண்டர்கள்.. காணும் இடமெல்லாம் சிதறிக்கிடந்த காலணிகள்
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். விஜயைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பெண்கள் என திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை பகுதி வரை கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருவதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால், மரக்கடை பகுதி வரையிலான சாலை முழுவதும் தொண்டர்களின் செருப்புகள் சிதறிக் கிடக்கின்றன.
முதல் பிரச்சாரம்
தமிழகத்தில் 2026 தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக என பல கட்சியினரும் தேர்தல் பணியைத் தீவிரமாக தொடங்கியுள்ளனர். நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருச்சியில் இன்று தொடங்கியுள்ளார். தவெக பிரச்சாரத்துக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

விஜய் தனி விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளம் முழங்க பூக்கள் தூவி உற்சாக வரவேற்களிக்கப்பட்டது. விமான நிலைய வளாகத்துக்குள் ரசிகர்கள் வராமல் இருக்கும் வகையில், காவல் துறை சார்பில் அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
தடுப்புகளை மீறிய ரசிகர்கள்
அந்த தடுப்புகளை எல்லாம் உடைத்துவிட்டு ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காகச் சென்றனர். இதனால், காவல் துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயின் பேச்சை கேட்பதற்காகவும், அவரைக் காண்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் திருச்சியில் குவிந்துள்ளதால் திருச்சி மாநகரமே ஸ்தம்பித்துள்ளது.
திருச்சி விமான நிலையம் முதல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை தொண்டர்கள் பலரும் திரண்டுள்ளனர். கட்டடங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் மேல் விஜய் கட்சியினர் ஏறக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக வீடுகள், கட்டடங்கள், பேனர்கள் மேல் கட்சியினர் ஏறி நின்று விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சிதறிக் கிடந்த செருப்புகள்
ஏராளமான தொண்டர்கள் விஜயின் பிரச்சார வாகனத்தை சூழ்ந்ததால் இன்ச் இன்ச்சாக பிரச்சார வாகனம் சென்று கொண்டிருக்கிறது. 10:30 மணிக்கு விஜயின் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தொண்டர்கள் சூழ்ந்ததால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலானது.
அதேசமயம், விஜயின் வாகனத்தை 5 வாகனங்கள் தான் பின்தொடர வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து செல்கின்றன. திருச்சியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. ஏராளமான தொண்டர்கள் மரக்கடைப் பகுதிக்கு நடந்தும் சென்று கொண்டிருக்கின்றனர். போக்குவரத்து நெரிசல், தொண்டர்கள் குவிந்துள்ளதன் காரணமாக திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை பகுதி வரை தொண்டர்களின் செருப்புகள் சிதறிக் கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications