தவெக நிர்வாகிகள் மறைவு.. விஜய் அனுப்பிய மெசேஜ்.. புஸ்ஸி ஆனந்திடம் வாக்குவாதம் செய்த உறவினர்கள்
திருச்சி: தவெக மாநாடு நேற்று நடைபெற்றது. ,இதில் கலந்து கொள்வதற்காக திருச்சியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இதற்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி முக்கிய தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. மேலும் தவெகவின் கொள்கை வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு, உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன். என்றார்.
விஜயின் பேச்சு அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் களம் எப்படியிருக்கும் என்று விவாதித்து வருகின்றனர்.
தவெக மாநாட்டில் பல்வேறு சர்ச்சைகளும் நடந்தன. அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து பைக்கில் கிளம்பி வந்த வசந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தவெக திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன், துணை தலைவர் கலை ஆகியோர் மாநாட்டுக்காக காரில் புறப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெக மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சீனிவாசனின் உறவினர்கள், உயிரே பறிபோகியும் கட்சியில் இருந்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. நாங்கள் இழப்பீடு எல்லாம் கேட்கவில்லை. ஒரு ஆறுதல் தான் எதிர்பார்க்கிறோம். இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை
சீனிவாசன் உயிருடன் இருந்தபோது விஜய்காக அவ்வளவு செலவு செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ வேட்பாளராகவும் அறியப்பட்டவர். அவரின் மறைவுக்கு கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. என்று கூறியிருந்தனர்.
இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சிக்கு நேரில் சென்று, நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது நிர்வாகிகளின் உறவினர்கள், ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த், தளபதி விஜய் சொன்னதால் நிர்வாகிகளின் மறைவுக்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்துள்ளோம். அவர்களின் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை தமிழக வெற்றிக் கழகம் பார்த்துக் கொள்ளும். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications