முதல் நாளே லேட்டா வந்தா எப்படி? விஜய்க்கு வழிவிடாத தொண்டர்கள்.. முக்கியமான ரூல்ஸையே மீறிட்டாங்களே!
திருச்சி: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திருச்சியில் இன்று முதல்முறையாக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். 10:30 மணிக்கு கடும் கட்டுப்பாடுகளோடு அவர் மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதித்த நிலையில் விமான நிலையத்தை விட்டு வெளியே வருவதற்கே 10.20 மணியானது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் விஜயால் பிரச்சாரத்தை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திருச்சியில் இன்று தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். வட மாவட்டத்திலும் தென் மாவட்டத்திலும் கட்சியின் மாநில மாநாட்டை நடத்திய அவர் தனது முதல் பிரச்சாரத்தை மத்திய மாவட்டமான திருச்சியில் இருந்து துவங்கியிருக்கிறார்.
வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்ற திருச்சியில் பிரச்சாரம் செய்யச் சொல்லப்படுகிறது. இதை அடுத்து கடும் கட்டுப்பாடுகளோடு விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தது.

நடிகர் விஜய்
குறிப்பாக திருச்சி மரக்கடை பகுதியில் 10:30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. மேலும் விஜய் விமான நிலையத்தில் இருந்து ரோட் ஷோ நடத்தக்கூடாது, அவரது வாகனத்திற்குப் பின்னால் 5 வாகனங்கள் தான் வரவேண்டும், கர்ப்பிணிகள் குழந்தைகளை பிரச்சாரத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்ட விஜய் 10 மணி அளவில் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழக வெற்றிக் கழகம்
பிரச்சாரம் நடக்கும் இடத்தை விட விமான நிலையத்திலிருந்து ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தினர் அங்கு குவிந்திருந்தனர். விஜய் வருகையை ஒட்டி விமான நிலைய வளாகத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் விஜய் வந்த தகவலைக் கேட்டதும் ஆர்வ மிகுதியில் தடுப்பை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் விஜய்யை நோக்கி விமான நிலையத்தின் முகப்பு பகுதிக்குச் சென்றனர்.
விஜய் ரசிகர்கள்
அங்கு ஏற்கனவே அவரது பிரச்சார வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் விஜய் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதை அடுத்து போலீஸாருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய்யின் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டதால் விமான நிலையத்தை விட்டு வெளியே வருவதற்கே காலதாமதமானது. அதாவது 10:30 மணிக்கு விஜய்க்கு பிரச்சாரம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பிரச்சார இடத்தை அடைவதற்கே பல நிமிடங்கள் பிடித்தது. டிவிஎஸ் டோல்கேட் அருகே 10:30 மணிக்குத்தான் விஜய் வந்தார்.
காவல்துறை கட்டுப்பாடு
அதற்குப் பிறகுதான் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறார். 10:30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி இருக்கும் நிலையில் பிரச்சாரத்திற்கு விஜய் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் சொல்லப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தைச் சூழ்ந்து கொண்ட நிலையில் மீண்டும் விஜய் திருச்சியிலிருந்து புறப்பட்டு அரியலூர் பெரம்பலூருக்கு பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications