ஸ்டாலின் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசே காரணம்.. ஒரே போடாக போட்ட வைகோ
திருச்சி: தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டார். சொல்லாதவற்றையும் நிறைவேற்றுகிறார். சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததற்கு குறுக்கே எழுப்பி தடை செய்யும் மத்திய அரசுதான் காரணம் என்று திருச்சியில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பேசினார். 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற உழைப்போம் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி சிறுகனூரில் மதிமுக மாநாடு இன்று நடைபெற்றது. அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக சார்பில் இந்த மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

முல்லை பெரியாறு அணையை கேரள அரசு உடைக்க முயன்ற போது, அந்த அணையை பாதுகாத்துக் கொடுத்தது தான் நம் இயக்கம். நியூட்ரினோ பேரழிவில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்களை பாதுகாக்க, நியூட்ரினோ ஆலைக்கு எதிராக போராடி தடையை பெற்றுக்கொடுத்ததும் நம் இயக்கம் தான்.
நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் அம்பேத்காரின் படத்தை திறக்க காரணமாக இருந்ததும் நம் இயக்கம் தான் இயக்கம். இதேபோன்று சீமை கருவேல மரங்கள் வெட்டி அழிக்க காரணமாக இருந்ததும் நம் இயக்கம் தான். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் 30,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தது நம் இயக்கம்.
இந்த இயக்கத்துக்கு பல சோதனைகள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து தான் வந்து இருக்கிறோம். நாட்டில் ஜனநாயக படுகொலை நடப்பதாக புள்ளி விவரங்களுடன் துரை வைகோ கூறினார். அவரது பேச்சை கேட்டு நானே திகைத்துவிட்டேன். எங்கே இருந்து இந்த ஆற்றல் வந்தது என நானே வியந்துவிட்டேன். நீங்கள் தந்த ஆற்றல். நீங்கள் காட்டும் பற்று, பாசம் என அவர் கூறுகிறார்.
இங்கே 30 நாட்கள் சிறைபட்டால் முதல்வராக இருந்தாலும், எந்த அமைச்சராக இருந்தாலும் விசாரிக்க படாமல் பதவியை பறிக்கலாம் என்ற அரசியல் சட்ட திருத்தம் 130-ஐ அமித்ஷா தாக்கல் செய்து இருக்கிறார். கட்சி பாகுபாடு இன்றி இதனை அனைவரும் எதிர்க்க வேண்டும். சமஸ்கிருதமும், இந்தியும் மட்டும் தான் ஆட்சி மொழிகாளாக இருக்க முடியும் என்று கூறுகிறார்.
அமித்ஷா அவர்களே... நீங்கள் கூறும் சமஸ்கிருதம் செத்துப்போன மொழி. 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் 24 ஆயிரத்து 357 பேருக்கு மட்டும் தான் சமஸ்கிருதம் தெரியும். இதை எதிர்த்து 1968 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலத்திலேயே அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் கொண்டு வந்தது தான் இருமொழி கொள்கை. இங்கே இந்தி வேண்டாம். தமிழும், ஆங்கிலமும் தான் என்று அவர் முழங்கிய முழக்கம்.
திராவிட மாடல் ஆட்சி நடத்துகிற முதல்வர் மு.க. ஸ்டாலின், சொல்லாதவற்றையும் நிறைவேற்றுகிறார். சொல்லிய வாக்குறுதிகள் அனைத்தையும் பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டார். குறுக்கே சுவர் எழுப்பி தடை செய்யும் மத்திய அரசு தான் சில வாக்குறுதிகள் நிறைவேறாமல் போனதற்கு காரணம்.
வரும் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான மதிமுக தான் வெற்றி பெறும். மீண்டும் மு.க. ஸ்டாலின் மகுடம் ஏந்துவார். என்னை விட்டு விலகி சென்றவர்கள் எவரையும் எந்த மேடையிலும் விமர்சித்ததில்லை. விமர்சிக்க போவதும் இல்லை. ஆனால் அண்ணாவின் வார்த்தைகளான வாழ்க வசவாளர்கள் என்று மட்டும் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications