ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - டிச.14ல் திருச்சியில் உள்ளூர் விடுமுறை
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. இங்கு தமிழ்மாதங்கள் 12 மாதமும் திருவிழாதான் நடைபெறும். பிரம்மோற்சவம், தேரோட்டம், ஊஞ்சல் உற்சவம் என கோலாகலமாக நடைபெற்றும்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை முதல் பகல்பத்துவிழா நடைபெற்று வருகிறது.
நம்பெருமாள் தினசரியும் தங்க, வைர, முத்து நகைகள் சூடி அலங்காரமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்காம் நாளான இன்றைய தினம் நம்பெருமாள் அர்ஜூனா மண்டபத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
வரும் 13ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நம்பெருமாள் 14ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும், எனினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணைகருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகின்ற 18.12.2021 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.