பெங்களூரில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி வரும் விமான பயணிகளுக்கு நல்ல செய்தி
தூத்துக்குடி: கொரோனா காலத்தில் சேவையை நிறுத்திய ஒரு தனியார் விமான நிறுவனம் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் விமான சேவையை தொடங்க உள்ளன. தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு கூடுதல் விமானங்கள் வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் விமான நிறுவனம் மூலம் சென்னைக்கு 2 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்க உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய துறைமுகம் என்றால் அது தூத்துக்குடி துறைமுகம் தான். தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக தூத்துக்குடி நகரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தூத்துக்குடி நகரம் வேகமாக வளர்வதுடன் அருகில் உள்ள திருநெல்வேலியிலும் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இந்த காரணங்களால் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடியும் போது பெரிய விமானங்கள் எளிதாக வந்து தரையிறங்க முடியும்.

தற்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமான நிறுவனம் மூலம் தினமும் 4 சேவைகள் வழங்கி வருகின்றன. இதேபோன்று பெங்களூருக்கும் விமான சேவை இருக்கிறது.. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சேவையை நிறுத்திய ஒரு தனியார் விமான நிறுவனம் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் விமான சேவையை வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக விரைவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் அலுவலகத்தை திறக்கவும் முடிவு செய்திருக்கிறது.

அந்த குறிப்பிட்ட தனியார் விமான நிறுவனம் மூலம் சென்னைக்கு 2 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்க உள்ளது அதன்படி சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் தூத்துக்குடிக்கு 7.40 மணிக்கு வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.45 மணிக்கு சென்னையை சென்றடையும். மதியம் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் மாலை 3.55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் விமானம் 6.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.

இதே போன்று தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விமானம் 9.35 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். பெங்களூருவில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் 11.45 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். இந்த விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவை, அந்த நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கிறது. . தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications