முதல்வர் காணொலியில் பேசுகிறார்! உதயநிதி துபாயில் இருக்கிறார்!எல்லா ஓட்டும் பாஜகவுக்குதான்..அண்ணாமலை
தூத்துக்குடி: நீட் தேர்வு தொடர்பாக ஒரு நாடகத்தை கடந்த சில மாதங்களாக திமுக நடத்தி வந்தது. தற்போது ரீல் அறுந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சி பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் விழா மேடையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக களத்தை தயார்படுத்தி பாஜக வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளோம்.

காங்கிரஸ்
பாஜக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அதே போல் தொடரட்டும் நல்லாட்சி என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் 8 மாதத்தில் மக்கள் பாதிப்பைத்தான் பெற்றுள்ளனர். எல்லாவற்றிலும் கமிஷன் தான்.

ஜல்சக்தி குடிநீர் திட்டம்
பாஜக ஆட்சியின் போது மத்திய அரசின் முத்ரா திட்டம், ஜல்சக்தி குடிநீர் திட்டம் மூலம் லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் பயனடைந்துள்ளனர். 8 வருடத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு தந்துள்ளது. கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் பாஜகவினர். திமுக என்றைக்கு தமிழகத்தை விட்டு போகிறதோ அன்று தான் நல்லாட்சி.

7 வாக்குறுதிகள்
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். இது குறித்து மக்கள் கேட்பார்கள் என்பதால் முதல்வர் காணொலி காட்சி மூலமாக பிரச்சாரம் செய்கிறார். உதயநிதி ஸ்டாலின் துபாயில் உள்ளார்.

ரீல் அந்து போச்சு
நீட் டிராமா கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்களின் ரீல் அந்து போச்சு. ஏழை எளிய மக்கள் நீட் தேர்வினால் அதிகம் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் கைது செய்யப்படுகின்றனர். இதில் சதி உள்ளது. திமுக ஒரு நாடக கம்பெனி - அதனை உடைப்போம் உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோடி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள் என்றார்.












Click it and Unblock the Notifications