மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது முதல்வர் ஸ்டாலின் டெல்லி போனார்.. தூத்துக்குடியில் தமிழிசை குமுறல்
தூத்துக்குடி: திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறி உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். வெள்ளத்தில் தவித்த மக்களை சந்திக்காமல் கோவையில் விழாவில் பங்கேற்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று முடிவதற்கு முன்பே தென் மாவட்டங்களை மழை சூறையாடியது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை பெருவெள்ளம் சூழ்ந்தது. மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரண நிதி கோரியிருந்தது. மத்திய அமைச்சர் சொன்ன கருத்துக்கு பதில் தரும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வரி பணத்தை தான் கேட்கிறோம் யார் அப்பன் வீட்டு காசையும் கேட்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடச் சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ''இங்குள்ள திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தமிழிசை அளித்த பேட்டி: நான் நேரடியாக முதல்வரை பார்த்து கேட்கிறேன். 18ஆம் தேதி இங்கே மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா? அல்லது "மக்களுடன் முதல்வர்" என்று கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா.
வெள்ளம் சூழ்ந்த பிறகு அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கட்சிக்காக டெல்லி சென்றுவிட்டார். பிரதமரை பார்ப்பதற்காக தான் டெல்லி போனேன் என்கிறார்கள். கூட்டணி கட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் போனீர்களா? பங்கேற்றீர்கள்தானே.
மாநில அரசு நிச்சயமாக இதனைக் கையாள்வதில் தோல்வி அடைந்திருக்கிறது. முதலமைச்சர் இன்னொன்று சொல்கிறார்.'சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம்' என்கிறார். சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications