இன்சூரன்ஸ் ஆவணங்களில் லாரி ஓனர் செய்த தில்லாலங்கடி.. செட்டில்மென்ட் என நம்பி ஏமாந்த பிரகாஷ்!
தூத்துக்குடி: பழைய இன்சூரன்ஸ் ஆவணங்களை எடிட் செய்தோ அல்லது இல்லாத ஒரு நிறுவனத்தின் பெயரிலோ போலி பத்திரங்களை தயாரிப்பது தொடர்கதையாகி வருகிறது.. அங்கீகாரம் இல்லாத நபர்கள் குறைந்த பிரீமியத்தில் இன்சூரன்ஸ் எடுத்துத் தருவதாகக் கூறி போலி ஆவணங்களை தந்துவிடுவதும் பெருகி வருகிறது.. இதற்கெல்லாம் ஒரு கடிவாளத்தை போட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.. நேற்று தூத்துக்குடியில் என்ன நடந்தது தெரியுமா?
தமிழகம் முழுவதும் இன்சூரன்ஸ் மோசடிகள் அதிகரித்தபடியே உள்ளன.. கடந்த வருடம் இதுதொடர்பான புகார்கள் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றதும், அது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவும் மிக முக்கியமானது..

அதாவது தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி நடந்துள்ளன.. முதலில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் இந்த புகாரை சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டுக்கு கொண்டு வந்தன.
இன்சூரன்ஸ் கம்பெனிகள்
விபத்தே நடக்காமல் நடந்ததாக காட்டுவது அல்லது ஒரே விபத்துக்கு பலமுறை பணம் பெறுவது போன்ற மோசடிகள் நடப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வாதிட்டன. இந்த விவகாரத்தை விசாரிக்க ஏற்கனவே ஒரு சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் அந்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்திருந்ததால் பணிகள் அப்படியே நின்று போயிருந்தன..
கோர்ட்டில் இதே வழக்கு மீண்டும் வந்தபோது, சுப்ரீம் கோர்ட் அந்த தடையை நீக்கிவிட்டதால், சிறப்பு போலீஸ் குழு விசாரணையைத் தொடங்கலாம் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது.
ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
மேலும், மோசடி தொடர்பாக தாங்கள் கொடுத்த 467 புகார்கள் மீது இதுவரை எந்த எப்ஐஆர் எதுவுமே போடப்படவில்லை என்றும், அதனால் அந்தப் புகார்களை உடனடியாகப் பதிவு செய்து விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. போலீஸ் தரப்பும் இந்த மோசடி வழக்குகளை தீவிரமாக விசாரிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இதையெல்லாம் கேட்ட ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொடுத்த 467 புகார்கள் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவற்றை சிறப்புப் புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது நினைவிருக்கலாம்..
ஆனாலும் இன்சூரன்ஸ் மோசடிகள் என்பது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கும் மலிந்து வருகிறது.. நேற்றுகூட 2 பேர் தூத்துக்குடியில் வேறொரு இன்சூரன்ஸ் மோசடியில் கைதாகி உள்ளனர்..
போலி ஆவணங்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 44 வயது பிரகாஷ் என்பவர், கடந்த 2014-ஆம் ஆண்டு கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்து தொடர்பாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி உரிமையாளர் மகேஸ்வரன் மற்றும் டிரைவர் தென்னரசு ஆகியோர் அந்த தொகையை வழங்காமல் இழுத்தடித்தனர்.
அதுமட்டுமல்லாமல், நீதிமன்ற உத்தரவு இருந்தும் இழப்பீட்டை தராமல் ஏமாற்றும் நோக்கில் அவர்கள் 2 பேரும் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
செட்டில்மெண்ட் - நீதிமன்ற உத்தரவு
இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றிய லாரி ஓனர் மகேஸ்வரன் மற்றும் டிரைவர் தென்னரசு ஆகிய இருவர் மீதும் போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், குறைந்த விலைக்கு ஆசைப்படாமல் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மூலம் நேரடியாக இன்சூரன்ஸ் எடுப்பதோடு, அதிகாரிகள் டிஜிட்டல் முறையில் அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications